மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் கலைமாலை நிகழ்வு 2026. (அவுஸ்திரேலியா) - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 27 September 2026

மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் கலைமாலை நிகழ்வு 2026. (அவுஸ்திரேலியா)


பாரததேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் நீர்கூட அருந்தாது சாகும்வரை உண்ணாநோன்பிருந்து 26.09.1987 அன்று ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்களின் 39_வது ஆண்டு நினைவுநிகழ்வும் தியாகதீபம் கலைமாலை நிகழ்வும் கடந்த 26.09.2026  சனிக்கிழமையன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


மெல்பேர்ணில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான டன்டினோங் நகரத்தில்  அமையப்பெற்றிருந்த தமிழ்ச்சமூகமையத்தின் கற்பகதரு மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் செல்வி சகிர்த்தனா சிவநாதன்  தலைமையில்  நிகழ்வுகள் ஆரம்பமாகின. 


முதல்நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முதன்மைச் செயற்பாட்டாளர் திரு வசந்தன் ஆனந்தராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.


அதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை விக்ரோறியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு ராஜ் நாராயணன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத்தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு றகு கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார்.


தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு முன்னாள் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜனனி பாலச்சந்திரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


சிறிலங்கா அரசபடைகளின் ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த்தாக்குதலில் 26.09.2001 அன்று வீரச்சாவைத்தழுவிக்கொண்ட கேணல் சங்கர் (முகிலன்) அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் அலைநிலா அவர்களது சகோதரன் திரு கிரிசாந்த் இரத்தினம் அவர்கள்  ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


சுகயீனம்காரணமாக 25.08.2002 அன்று சாவடைந்த கேணல் ராயு (குயிலன்) அவர்களது திருவுருவப்படத்திற்கு திருமதி தேவறூபி சுதாகரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் தியாகதீபம் லெப் கேணல் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்


மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.


அடுத்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவாக  வணக்க நடனம் இடம்பெற்றது. "விழிகளில் பொழிவது அருவிகளா வீர திலீபன் நினைவுகளா .." என்ற பாடலுக்கு திருமதி மேரி பிரசாத் அவர்களது நெறியாள்கையில் செல்விகளான திலுஜா காளிராசா, கனுசிறி காளிராசா, கம்சனா முளளீதரன் மற்றும் விதுஷா முரளீதரன் ஆகியோர் வணக்கநடனத்தை வழங்கினார்கள்.


அதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக மெல்பேர்ண் இசைக்கலைஞர்களின் பின்னணி இசையில் மெல்பேர்ண் உள்ளூர்ப்பாடகர்களின் உணர்வுபூர்வமான குரல்நயத்துடன் தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுப்பாடல்கள் உள்ளிட்ட தாயகப்பாடல்களை உள்ளடக்கிய தியாகதீப கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வணக்க நடனத்தை வழங்கிய மாணவிகள் மற்றும் அதனை நெறியாள்கை செய்த ஆசிரியை அத்துடன் கலைமாலை நிகழ்வில் கலந்துகொண்ட இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகியோர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் மதிப்பளிக்கப்பட்டு நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

   

இறுதியாக சமூக அறிவித்தல்கள் வாசிக்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் மாலை 7.30  மணியளவில் தியாகதீபம் கலைமாலை 2026 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.










































 






No comments:

Post a Comment

Post Bottom Ad