தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 19 April 2022

தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர்

 


தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னால் முடிந்த பணியை நிறைவாக செய்துநின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்கள் 85வது வயதில் மறைந்த நிலையில், தன்னால் முடிந்தவரை இணைத்துக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டியாக செயற்பட்ட அவரின் நினைவுகளை ஆழ எங்களின் மனங்களில் பதித்துக்கொள்ளுகின்றோம் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று 19-04-2022 வெளியிடப்பட்ட அவ்வறிக்கையின் முழுவிபரம் வருமாறு:


தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னால் முடிந்த பணியை நிறைவாக செய்துநின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்கள் 85வது வயதில் மறைந்த நிலையில், அவரது நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றோம். தன்னிடமிருந்த மும்மொழி ஆற்றலையும் தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்து வாழ்ந்த அவர், திருகோணமலையில் 25-12-1938 இல் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் விளைவுகளால், இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் - வதிரியில் வாழ்ந்து வந்திருந்தார். நெல்லியடி இருதயக் கல்லூரியில் கல்விகற்று அதன் பின்னர், நிர்வாகசேவை பரீட்சையில் சித்தியடைந்து தபால் சேவையில் இணைந்துகொண்டார்.

இலங்கைத்தீவின் அனைத்து மாவட்டங்களிலும் சேவையாற்றிய அவர், 1983 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் உயிர்தப்பி மீளவும் ஊர் திரும்பினார். பின்னர் சவூதிக்கு சென்று 7 வருடங்கள் பணியாற்றிய அவர், தனது ஒரே மகனுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தாயகம் திரும்பினார். தனது மகனுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. தானே முன்வந்து தனது சிறுநீரகத்தை தானம் செய்தது மட்டுமன்றி, தான் ஐம்பது வயதை கடந்த பின்னரும் உறுப்பு தானம் செய்தும் சுகதேகியாக வாழ்கின்றேன் என்றும், உறுப்புதானம் செய்வது நல்லதொரு சமூகசேவை எனவும், பலருக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார்.

 

எமது விடுதலை இயக்கத்தோடு இணைந்து 1993 தொடக்கம் கற்பித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் எமது அமைப்பின் கோண்டாவில் ஆங்கிலக்கல்லூரியில் கற்பித்த அவர், பெரும் முற்றுகைப்போர் ஏற்பட்டு 1995 இல் குடாநாட்டு இடப்பெயர்வின்போது வன்னிக்கு வந்தார். கிளிநொச்சி - திருநகர் பின்னர் முல்லைத்தீவு என அவரது கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்ந்தன. அவரது ஆங்கில மொழியாளுமை தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட பலராலும் பாராட்டக்கூடியதாக இருந்தது. நேரடியான மொழிபெயர்ப்பை விட யதார்த்தமான மொழிபெயர்ப்பு தான் நல்லது என கற்பிப்பார்.

 

தமிழ்மொழியிலும் அவரது ஆழமான பற்று ஒவ்வொரு சிறு விடயங்களிலும் வெளிப்படையாக தெரிந்தது. ஒரு தடவை தமிழக பத்திரிகையாளர் ஒருவருக்கு "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" என்ற பாடலை பாடி, அந்த வரிகளின் ஊடாக தமிழர் வாழ்வையும் வலியையும் ஆழமாக விளக்கியதை உதாரணமாக குறிப்பிடலாம்.

 

சமாதான காலப்பகுதியில் தேதுண்ண (வானவில் Rainbow) என்ற மாதாந்த சிங்கள பத்திரிகையை எமது விடுதலை இயக்கத்தின் சார்பாக வெளிக்கொண்டு வருவதற்கும் ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகவிருந்தது. இவரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நினைவுகூரும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகள் பத்திரிகையில் வரும் பொருத்தமான ஆவணங்களை தேர்வு செய்து அவற்றை சிங்கள ஊடகம் ஊடாக கொண்டுவருவதற்கு அதீத கவனம் எடுத்ததை குறிப்பிடுகின்றார். அதேவேளை எமது விடுதலை அமைப்பின் சமாதான செயலகத்தின் இணையத்தளத்திற்கான விடயங்களை தயாரித்து, பதிவேற்றுவதற்கும் மிகவும் ஆர்வமானவராக அவர் இருந்தார். எமது அமைப்பின் அறிக்கைகள் மற்றும் தகவல்களை  ஊடகங்கள் ஊடாக பிரசுரிப்பதற்காக, ஆங்கிலத்திலும் சிங்களத்திலும்  உத்தியோபூர்வ மொழிபெயர்ப்பாளராக அவரது பணி பாராட்டப்படவேண்டியதாகும்.

 

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உரைபெயர்ப்பாளராக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். நோர்வே, தென் ஆபிரிக்கா, சுவிஸ்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று தனது பணியை ஆற்றியிருந்தார். தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் பங்குகொண்ட சில சந்திப்புகளிலும் உரைபெயர்ப்பாளராக பங்குகொண்டிருந்தார். அதன் பின்னர் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பா. நடேசன் அவர்கள் நியமிக்கப்பட்டபோது, அவருடனும் பல சந்திப்புகளில் உரைபெயர்ப்பாளராக அவர் பங்குகொண்டிருந்தார்.

 

ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் மும்மொழி ஆளுமை என்பது பலரது கவனத்தை பெற்றிருந்தது. ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் மறைவையொட்டி சர்வதேச அனுசரணையாளராக பங்குகொண்ட எரிக்சொல்கெம் அவர்கள் அவரை "உறுதியான தமிழ் நாட்டுப்பற்றாளர்" எனவும் "திறன் மிக்கமொழிபெயர்ப்பாளர்" எனவும் குறிப்பிடுகின்றார்.

 

இவரது துணைவியார் சுகவீனமாக இருந்த காலங்களில் அவரையும் தனியே பராமரித்தவாறு, தேச விடுதலைப்பணிக்கும் நேரத்தை ஒதுக்கி அர்ப்பணிப்புடன் செயற்படுபவராக இருந்தார். துணைவியார் 2005 இல் சாவடைந்த பின்னரும், ஏற்கனவே துணைவியாரிடம் கலந்துரையாடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய பணத்தில் பெரும் பகுதியை உதவி தேவைப்பட்டவர்களுக்கு வழங்கிவந்தார்.

 

இறுதிப்போரில், 2009 இல் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டு, சிறிலங்கா அரசோடு இணைந்து ஒத்துழைக்கும்படி வற்புறுத்தப்பட்ட நிலையில் அதனை நிராகரித்திருந்தார்.

 

ஒவ்வொரு மாதமும் பொலிஸ்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன் 2010 இல் விடுவிக்கப்பட்டு நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின்னர் 2016 இல் வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்கள் 05-09-2021 அன்று சாவடைந்த நிலையில், வவுனிக்குளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின்னரும், அதன் பங்குத்தந்தையை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை என்பது, தொடர்ந்திருந்த அடக்குமுறையின் அபாயநிலையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

மிகவும் எளிமையாக வாழ்ந்த அவர், துவிச்சக்கர வண்டியில் சென்றே அனைத்து பணிகளையும் செய்தார். பிறமொழி பத்திரிகையாளர்களோடும் கடும் நெருக்கடியான நிலைகளிலும் தொடர்புகளை பேணிவந்திருந்தார்.

 

வயோதிப வயதில் தனித்தவராக வாழ்ந்தபோதும், தமிழர் தேசத்தின் மீது பற்று மிகுந்தவராக உறுதியானவராக இருந்தார். பேரழிவில் தமிழினம் சிக்கியபோதும், தேசியத்தலைமை தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து, தமிழர் தலைவிதியை சர்வதேச அரங்குக்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறது என்றும் அதன் உண்மைநிலையை உலகம் விரைவில் விளங்கிக்கொள்ளும் எனவும் குறிப்பிடுவார்.

 

அந்த வகையில் தமிழினத்தின் விடுதலைக்கான பணியில் தன்னால் முடிந்தவரை இணைத்துக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டியாக செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் நினைவுகளை ஆழ எங்களின் மனங்களில் பதித்துக்கொள்ளும் நாம், அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருடன் எமது கரங்களையும் பற்றிக்கொள்கின்றோம்.

 

 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்














No comments:

Post a Comment

Post Bottom Ad