தமிழினம் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு தனக்கான உரிமைகளை பெற்று, தன்னாட்சி அதிகாரத்துடன் கௌரவமாக இப்பூமிப்பந்தில் வாழ வேண்டும் என்ற இலட்சிய உறுதியுடன் விதையாகிவர்கள் மாவீரர்கள். அம் மாவீரர்களை பூசிக்கும் புனிதநாளான மாவீரர் நாள் நிகழ்வு புதன்கிழமை 27.11.2024 அன்று மாலை மணி 6.05க்கு பேர்த்தில் ஆரம்பமாகியது.
நிகழ்வுகளில் முதலாவதாக தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை இலங்கை தமிழ்ச் சங்க தலைவர் திரு. பிரதீபன் அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. ஜீவகன் அவர்களும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. கிருபாகரன் பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 2008ஆம் ஆண்டு ஆற்றிய மாவீரர்நாள் உரை ஒலிபரப்பப்பட்டதை தொடர்ந்து, நினைவொலி எழுப்பப்பட்டது. நினைவொலியை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் அதன்பால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முதன்மைச் ஈகைச்சுடரினை, ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிய மாவீரர் மேஜர் அமலனின் சகோதரர் திரு சுதன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைக்க, தாயக விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியாகிய லெப். சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. சிவன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய மாதிரி வடிவக் கல்லறைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உரித்துடையோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றிவைக்க, துயிலுமில்ல பாடல் ஒலிக்கப்பட்டது. மிளிரும் சுடர்களின் நடுவே மாவீரச் செல்வங்களின் உருவை அவர்களின் உணர்வை, இலட்சியத்தை தரிசித்துருகும் அற்புத நிகழ்வில் அனைவரும் ஒன்றியிருந்தனர்.
தொடர்ந்து மலர்வணக்க பாடல் ஒலிக்க மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்துநின்று அனைவரும் மலர்வணக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களுக்கான வணக்க நடனம் இடப்பெற்றது. நடனத்தை செல்வி யதுர்சிகா ரகுநாதன் வழங்கினார். அடுத்து “உங்கள் நினைவுகளை மட்டும் சுமந்து வரவில்லை” என்ற மாவீரர் நாள் கவிவழங்கினார் செல்வி மேகன் தயான் அவர்கள். அதனைத் தொடர்ந்து இளைய தலைமுறை சார்பாக செல்வன் சஜித் விமலாதித்தன் மாவீரர் நாள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அடுத்து “உலகமே வியந்து பார்க்கும் உத்தமர் நினைவுநாள்” எனும் கவிதையை செல்வன் ஜஸ்வின் ஜெயகஜன் அவர்கள் வழங்கினார். அடுத்து மாவீரர் வணக்க நடனத்தை செல்வி மிதுப்பிரியா கிருபாகரன், செல்வி காணுஜா ஜெயகாந்தன் மற்றும் செல்வி பிரிந்திகா ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அடுத்து மாவீரர் செல்வங்களுக்கான பாமாலையை சிறுமி தியா நிக்சன் அவர்கள் வழங்கினார். அடுத்து ”கண்களில் மழை வரும் கார்த்திகை மாதம்” என்ற குழுப்பாடலினை செல்விகளான அப்சரா உமாகாந்தன், வரோனிகா குகராஜா, லக்சகி விமலாதித்தன், மகிஷா புருசோத்தமன் மற்றும் அக்சனா குலசேகரம் ஆகியோர் வழங்கிச்சென்றனர். தொடர்ந்து மாவீரர்நாள் சிறப்புரையினை திரு. வித்தியாகரன் வால்மேகம் அவர்கள் வழங்கினார்.
நிறைவாக தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன. மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை செல்வி சுகபாரதி கிருபாகரன் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
No comments:
Post a Comment