தேசத்திற்கான காலக்கடமையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து நின்ற ஆ.ந.தீ அவர்களின் விடுதலைப் பணியாகக் காலத்தின் பதிவுகளாக மூன்று நூல்களை வெளியிடுகின்ற நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 15-12-2024 அன்று மாலை 3.45 மணிக்கு வென்ற்வேத்வில் குமுகாய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. அழகன் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்க, ஆ.ந.தீ அவர்களின் குடும்ப உறவுகள், நண்பர்கள், செயற்பாட்டாளர் எனப் பத்துப் பெண்கள் இணைந்து பொதுச்சுடர்களை ஏற்றிவைத்து நிகழ்வைத் தொடக்கிவைத்தார்கள்.
தொடர்ந்து, நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது, சாதாரணமான நிகழ்வாக அன்றி, எமது விடுதலைப் பணியின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுகளுடன் அவரைப் போல, அனைவரும் தேசத்தின் குரலாகத் தங்களது செயல்கள் ஊடாகத் தேசத்தின் குரல்களாகத் திகழவேண்டும் என்பதன் குறியீடாக அவரது நினைவுகளை நெஞ்சங்களில் ஏற்றிக்கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
ஈகைச்சுடரினை வடபோர் முனைக் கண்டல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் 06/12/2007 இல் வீரச்சாவடைந்த லெப்ரினன்ற் கேணல் ஞானசுதன் அல்லது மணி என அழைக்கப்படும் கந்தசாமி கணேசலிங்கம் அவர்களின் பேத்தி செல்வி. தினுஷா குவேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தாயக விடுதலைக்கான பணியில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் போராட்டத்தின்பால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது.
தொடர்ந்து, வெளியீட்டு விழாவுக்கான தலைமையுரையை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வ கணேசன் வழங்கினார். மூன்று புத்தகங்களையும் வெளியீடு செய்யும் தமிழ்த்தாய் - அவுஸ்திரேலியா வெளியீட்டகத்தின் சார்பாக இளைய செயற்பாட்டாளர் செல்வி. கதிரினி ரட்ணகுமார் அவர்கள் சிறிய உரையை வழங்கினார். வெளியீட்டு நிகழ்விற்கான வாழ்த்துரையை மூத்த எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முதலாவதாக பகலாகிய இரவுகளும் இரவாகிய பகல்களும் நூலின் முதற் படியை ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது 01-09-1997 அன்று வீரச்சாவடைந்த கப்டன். கண்ணகி அவர்களின் தாயாரும், 2009 மே 18 இறுதி யுத்தத்தின்போது வீரச்சாவடைந்த தளபதி மாவீரர் ஆரமுதன் அவர்களின் சகோதரியுமான திருமதி. புஸ்பராணி மாணிக்கம் அவர்களும் அவரது மகன் மோகன் மாணிக்கம் அவர்களும் இணைந்து பெற்றுக்கொண்டார்கள்.
தொடர்ந்து காலத்தின் பரிசு நூலின் முதற் படியை, இந்நிகழ்விற்காக டார்வினில் இருந்து வருகைதந்திருந்த திரு. திருமேனிப்பிள்ளை நல்லைலிங்கம் அவர்களும் திருமதி. மைதிலி நல்லைலிங்கம் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, சாகாத சான்று நூலின் முதற் படியை நூலின் எழுத்தாளர் ஆ.ந.தீ அவர்களின் துணைவியார் திருமதி. இராசநாயகம் துஸ்யந்தி தீபவர்ணன் அவர்களும் அவர்களின் புதல்வன் செல்வன். இசைக்கோ தீபவர்ணன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
தொடர்ந்து, மூன்று நூல்களின் தொகுப்பையும் சிறப்புப் படிகளாக, தமிழர் அமைப்புகள், தமிழ்ப்பாடசாலைகள், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் நேரடியாக நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இதில் பலர் குடும்பங்களாக வருகைதந்து நூலினைப் பெற்றுக்கொண்டு நூலாசரியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது மதிப்பளிப்பைப் பதிவு செய்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மூன்று நூல்களையும் சமநேரத்தில் வெளியீடு செய்வதற்கு ஏற்றவாறு குறுகிய காலத்தில் நூல்களிற்கான வடிவமைப்புகள், அட்டைப்பட வடிவமைப்பு, அச்சாக்கப்பணிகளைச் சிறப்புடன் செய்து பங்களித்த நிசா கிறியேசன் நிறுவனர் நிசாகுலன் அவர்களுக்கும் தேசப்பணியாக மூன்று நூல்களை வெளியிட்ட ஆ.ந.தீ அவர்களுக்கும் மதிப்பளிப்பு விருதை சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் ஜனகன் அவர்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காலத்தின் பரிசு நூலுக்கான மதிப்பீட்டுரையை எழுத்தாளர் ஊடகவியலாளர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களும், சாகாத சான்று நூலுக்கான மதிப்பீட்டுரையை தமிழ்மொழி ஆசிரியர், எழுத்தாளர் பரமேசுவரன் இரங்கநாதன் அவர்களும், தேசவிடுதலைக்கான பணியில் தங்கள் வாழ்வை இணைத்துக்கொண்டவரும் ஆ.ந.தீ அவர்களின் துணைவியாரின் நண்பருமான திருமதி. ரஞ்சினி பிரதீபன் அவர்களும் வழங்கினர்.
தொடர்ந்து, எழுத்தாளர் ஆநதீ அவர்களின் குடும்பத்தினர் சார்பில் அவர்களின் புதல்வன் செல்வன் இசைக்கோ தீபவர்ணன் அவர்கள் சிற்றுரை வழங்க, மூன்று நூல்களிற்கான ஏற்புரையை எழுத்தாளர் ஆ.ந.தீ அவர்கள் வழங்கினார். நிறைவாக, நன்றியுரையைத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஜனகன் வழங்கினார்.
வெளியீட்டு விழா நிகழ்வை மிகவும் கனதியான பெறுமதியாக அனைவரின் நினைவுகளில் ஏற்றிவைத்த எழுத்தாளர் ஆநதீ அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மீளவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, நிகழ்வு நிறைவுபெற்றது.
இப்புத்தகங்கள் ஊடாக கிடைக்கப்பெறும் நிதியை நூலாசிரியராலும் அவரது குடும்பத்தினராலும் பரிந்துரை செய்யப்படும் ஆவணப்படுத்தல் திட்டம் ஒன்றிற்காகப் பயன்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment