அன்பான உறவுகளே,
இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பை அழிக்கவேண்டும் என்ற நோக்குடன், தமிழர்கள் மீதான இனவழிப்பு போரை 1956 இல் இருந்து தொடக்கிவைத்த சிங்கள பேரினவாத அரசுகளை எதிர்கொள்வதற்கு மென்முறை வழியில் எழுந்த குரல்கள் வன்முறை வடிவில் அடக்கப்பட்டன. எனவே, புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் 1972 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது விடுதலை இயக்கம், தனிநாட்டுக்கான சுதந்திர விடுதலைப் போரை முன்னெடுப்பதன் ஊடாகவே, தமிழீழ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதனை திடமாக நம்பி, அதனை முன்னெடுப்பதற்கான கட்டுக்கோப்பான விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற பெயரில் 05-05-1976 இல் அது தன்னை கட்டமைத்துக்கொண்டது.
தமிழர்களுக்கான தன்னாட்சி அரசை அமைப்பதன் ஊடாக, தமிழர்களின் சுதந்திரமான வாழ்வை உறுதிப்படுத்த முடியும் என்பதை அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் இணைந்து 14-05-1976 அன்று வட்டுக்கோட்டை தீர்மானமாக முன்மொழிந்தனர். அத்தீர்மானத்தை தேர்தல் முறைமையின் ஊடாக 1977 இல் தமிழீழ மக்களின் ஆணையாக பெற்று, அதனை தமது உயரிய கொள்கையாக ஏற்று, அதற்காக போராட்டத்தினை உளப்பூர்வமாக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர்.
தமிழீழ மக்களின் பாதுகாவலர்களாக, தமிழீழத் தேசத்தின் கவசங்களாக, தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்து, தரையில் கடலில் வானில் உச்ச தியாகங்களை நிகழ்த்தி, தமிழீழ மக்களை காத்து நின்ற தேசிய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தனர். பல்வேறு படைப்பிரிவுகளை உருவாக்கி, தமிழீழப் படையை கட்டியமைத்து, குறுகிய காலத்தில் தமிழீழத்தின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் நிர்வகிக்கும் பலத்தை பெற்றவர்களாக வளர்ந்து நின்றார்கள்.
அதேவேளையில், தமிழீழ மக்கள் சார் கட்டமைப்புகளான அரசியல்துறை, காவல்துறை, நீதித்துறை, கலைபண்பாட்டுத்துறை, கல்வித்துறை, நிதித்துறை, மருத்துவத்துறை, பொருண்மியத்துறை என்பவற்றை நிறுவி இறுக்கமான பொருளாதாரத் தடையிலும் போர்ச்சூழலிலும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, மக்கள் ஆதரவு பெற்ற தமிழீழ நடைமுறை அரசை நிறுவியிருந்தனர்.
எனினும், தமிழீழ மக்களின் சுதந்திர விடுதலைக்கான ஆயுத விடுதலைப் போராட்டமானது பாரிய மனிதப் பேரழிவை நடத்தி 18 - 05 - 2009 அன்றுடன் மௌனிக்கப்பட்டது. ஆயுத விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோதும், தமிழீழ மக்களின் சுதந்திர விடுதலைக்கான கோரிக்கைகள் மௌனிக்கப்படவில்லை. அதற்கான முன்னெடுப்புகள், தொடர்ந்தும் தாயகத்திலும் தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, எமது விடுதலை இயக்கம் முன்னெடுத்த சுதந்திர விடுதலைக்கான முயற்சிகள், அனைத்து மக்களும் இணைந்து முன்னெடுக்கின்ற வரலாற்று நிகழ்வாக, 50 ஆண்டுகளின் நிறைவில் வந்திருக்கும் புறநிலையில், எந்த இறுக்கமான சூழலிலும் கட்டுக்கோப்புடன் செயற்பட்ட மாவீரர்களையும், போராட்டத்தின்பால் உயிரிழந்த உறவுகளையும், தமிழீழத் தேசத்தின் கட்டமைப்புகளின் செயற்பாடுகளையும் மனதில் நிறுத்தி முன்செல்லும் நிகழ்வாக, எழுகை என்ற பெருநிகழ்வை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று நடாத்துவதற்கு உள்ளோம்.
அன்றைய நிகழ்வில், அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து தேசிய செயற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் வருகைதந்து கலந்துகொள்ளவிருக்கின்றார்கள். பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இப்பெருநிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா




No comments:
Post a Comment