நியு சவுத்வேல்ஸ் தமிழ் மக்கள் சார்பாக, பன்னாட்டு தமிழ் மக்கள் இணைந்து, சிட்னி பொங்கல் திருவிழா நிகழ்வு பொங்கல் நாளான 15-01-2026 வியாழக்கிழமை அன்று, மாலை 1 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழர் அமைப்புகள் மற்றும் குடும்பங்கள் என இணைந்து பொங்கல் படையல் மேற்கொண்ட நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ் பின்னணி கொண்ட தமிழர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்கள், நியு சவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏனைய சமூகங்களை சேர்ந்த நண்பர்களும் பங்குகொண்டிருந்தனர்.
நூறிற்கும் மேற்பட்ட இளையோர்கள் பங்குகொண்ட கலைநிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்னாட்டுத் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளும் இணைந்துகொண்டு பொங்கல் பானையில் பொங்கல் செய்தும் தமது பாரம்பரிய நடனம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
வருகைதந்த பூர்வகுடி தலைவர்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் வரவேற்று கௌரவிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளாக, சிறார்கள் மற்றும் பெரியவர்களின் நடன நிகழ்வு, பாடல், பாரம்பரிய ஆடல் என்பனவும் கோலப்போட்டி, உறி அடித்தல் போட்டி, வினோதஉடை (மாறுவேட) போட்டி என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டு உயர்தர பாடசாலை தேர்வில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள், நீண்டகாலமாக தமிழ்மொழியை கற்பித்த ஆசிரியர், தலைப்பொங்கல் தம்பதிகள், தலைப்பிள்ளை பெற்றெடுத்த பெற்றோர், சிறந்த பொங்கல் பானைக்கான சிறப்பு பரிசில்கள் என பலர் பரிசில் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்தோடு சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற நல்வாய்ப்புச் சீட்டுப் போட்டியில் முதலாவது பரிசாக 1 பவுண் தங்கநகையும், இரண்டாவது பரிசாக $1000 பெறுமதியான தங்கநகை சீட்டும், மூன்றாவது பரிசாக $500 பெறுமதியான தங்கநகை சீட்டும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், விலங்குபண்ணை (animal farm) மற்றும் புலியாட்டம் ஆகியனவை நடைபெற்றன. காலநிலையை கருத்திற்கொண்டு துள்ளல் மேடை(jumping castle), இயந்திர எருமை (mechanical bull) என்பன இவ்வாண்டு ஒழுங்குசெய்யப்படவில்லை.
வருகை தந்த அனைவருக்கும் பொங்கல் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. விற்பனைக்கான உணவு நிலையங்களும், வணிகநிலையங்கள் அமைப்புகளின் தகவல் மையங்கள் என பல அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து கபடி காட்சி விளையாட்டும், சிறுவர் விளையாட்டுகளும் நடைபெற்றன. அத்தோடு, தமிழர் பாரம்பரிய உடைகளோடு கலந்துகொண்டு பொங்கலில் ஒரு குடும்பத்திற்கான சிறப்பு பரிசிலும், பொங்கல் நிகழ்விற்கு தாங்களாகவே சிற்றுண்டிகளை தயாரித்துக்கொண்டு வந்திருந்தவர்களுக்கு சிறப்பு சிற்றுண்டிகளுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக, பொங்கல் நிகழ்விற்கான முதன்மை அனுசரணையை வழங்கிய லிப்ரா ஜீவல்லறி நிறுவனத்திற்கான சிறப்பு விருதை நாடாளுமன்ற உறுப்பினர் அன்ரூ சாள்ற்றன் அவர்கள் வழங்கி மதிப்பளித்தார். மனிதாபிமானப் பணிகளில் இளைய வயதில் ஆர்வமாக செயற்பட்டு வரும் வள்ளுவன் தில்லைராஜா அவர்கள் சிறப்பு விருது வழங்கி மதிப்பளி்ககப்பட்டார்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைக்க உதவிய தமிழர் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், வணிக நிறுவனங்கள், நல்வாய்ப்புச் சீட்டு விற்பனைக்கான பிரதான அனுசரணையாளரான லிப்ரா ஜீவல்லறி மற்றும் பொங்கல் இடத்தை வழங்கி வைத்த கம்பர்லாந்து நகரசபை நிர்வாகத்தினர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

























.jpg)















No comments:
Post a Comment