வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரிலுள்ள East Burwood Reserve மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
11 - 01 - 2026 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மூத்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. ரவிகிருஷ்ணா அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத்தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. திலகராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு இரண்டு மாவீரர்களின் சகோதரன் திரு. கவிப்பிரியன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுவிழாவில் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் தொடர்பான சிறு விளக்கக் கருத்துக்களுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சிறுவர்களுக்கான தவளைப்பாய்ச்சல், சாக்கு ஒட்டம், பந்து பொறுக்குதல், சங்கீதக்கதிரை உள்ளிட்ட இன்னும் பல மெய்வல்லுனர் போட்டிகளும் மற்றும் பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், கிளித்தட்டு, 100 மீற்றர் ஓட்டப்போட்டிகள் மற்றும் அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்ட சிறுவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
கரப்பந்தாட்டப் போட்டியில் இறுதியாட்டத்திற்குத்தெரிவான அணிகளான NTSC Kings அணிக்கும் Thayagam Red அணிக்குமிடையிலான இறுதியாட்டத்தில் NTSC Kings அணி வெற்றியீட்டி வெற்றிக் கேடயத்தை தனதாக்கிக்கொண்டது.
கயிறு இழுத்தல்ப் போட்டியில் பல அணிகள் பங்குபற்றியிருந்தன. இறுதியாக பெண்கள் அணியில் வேங்கை அணியும் ஆண்கள் அணியில் சல்லியர்கள் அணியும் வெற்றியீட்டியிருந்தது
துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் இறுதியாட்டத்திற்குத் தெரிவான Jaffna Supper kings அணிக்கும் Cricket Star அணிக்குமிடையிலான இறுதியாட்டத்தில் Jaffna Supper kings அணி வெற்றியீட்டி வெற்றிக் கேடயத்தை தனதாக்கிக்கொண்டது.
சமநேரத்தில் வழமைபோல தாயக உணவுவகைகளான தோசை, வடை, சமோசா, முதலானவற்றோடு மதிய உணவாக கடலுணவுகள் கலந்த ஒடியற்கூழும் மாலை உணவாக கொத்துரொட்டியும் நாவிற்கினிய இன்னும்பல உணவு வகைகளும் பலூடா உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் தேனீர் என்பனவும் காலையிலிருந்து மாலைவரை விற்பனைசெய்யப்பட்டன.
இறுதியாட்டத்தில் பங்குபற்றிய அணிகளின் விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு அணிகளுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இரவு 8.00 மணியளவில் தமிழர் விளையாட்டுவிழா 2026 நிகழ்வுகள் யாவும் இனிதேநிறைவேறியது.

.jpeg)
.jpeg)
.jpeg)



No comments:
Post a Comment