
தமிழீழ விடுதலைக்கான தேசியப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நின்றவரும், போரின் காயங்களால் அதன் வலிகளை தாங்கி, ஆழ ஊடுருவிய சன்னங்களின் வலி, அவரை மீள எழுந்து நடக்கமுடியாத நிலையிலும் அனைவர்க்கும் முன்னுதாரணமாக செயற்பட்ட வைதேகி என அழைக்கப்பட்ட இராசநாயகம் துஷ்ஷியந்தி தீபவர்ணன் அவர்கள் 23.12.2025 அன்று காலமானார்.
அவருக்கான இறுதி வணக்க நிகழ்வு இன்று 24.12.2025 நடைபெற்றபோது, தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அவருக்கான உயர் மரியாதை வழங்கப்பட்டது.
இரங்கலுரை
எமது விடுதலை இயக்கம் சார்பாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா கட்டமைப்பு ஊடாக இந்த இரங்கல் உரையை பதிவு செய்கின்றோம்.
தமிழீழ தாயக விடுதலைப் போராட்ட பயணத்தில் - தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த குடும்பத்தினரின் துயர நிகழ்வில் நாம் கலந்துகொண்டிருக்கின்றோம்.
தாம் நேசித்த மக்கள் வாழவேண்டும் என்பதற்காக - தாம் வாழ்ந்த மண் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக - தங்களை அர்ப்பணிக்கின்றோம் என உருவான - ஒவ்வொரு விடுதலைப் போராளியின் வரலாற்றிலும் இருந்து பல பாடங்களை - நாம் கற்றுக்கொள்ள முடியும்.
தேச விடுதலைக்கான பணியை போரின் இறுதிக்காலம் வரை அர்ப்பணித்து நின்ற மாவீரர்களைப் போல, போரின் முடிவின் பின்னர் போரின் வலிகளை சுமந்து - வாழ்ந்து மறைந்தவர்களை நாம் மறக்க முடியாது.
போரின் வலிகளை சுமந்தவாறு தேச விடுதலைக்கான கனவுடன் வாழ்ந்தவர்களின் வரலாறுகளும் எமது சமூகத்திற்கு வழிகாட்டியாகவே திகழ்கின்றது.
தாயக மக்களின் விடுதலைக்காக இணைந்த நாளில் இருந்து விடுதலைப் போராட்டம் வழங்கிய அனைத்துப் பணிகளையும் அனைவருக்கும் முன்னுதாரணமாக சிறப்பாக செய்துவந்தவராகவே இவரது தோழிகள் நினைவு கூருகின்றார்கள். கடல்புலிகளின் சிறப்புத் தளபதியின் நேரடி வழிகாட்டலில் செயற்பட்ட இவர், பல கடற்சமர்களின் விழுப்புண்களை ஏற்றும் இயலாத நிலையிலும் படகோடிச் சென்று களமாடிய வரலாறுகளை கொண்டவர்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீது ஆழமான பற்றுறுதியை கொண்டிருந்த அவர், தலைவரது சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் எப்போதும் உதாரணம் காட்டி மெச்சுபவராக வாழ்ந்து வந்திருந்தார்.
இயலாத நிலையிலும், அனைத்து தேசிய நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, எதிர்கால சமூகத்திற்கு வழிகாட்டியாக தாம் செயற்படவேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த போதிலும் கலங்காமல் முகமலர்ச்சியுடன் - தனது துணைவருக்காகவும் தனது மகனுக்காகவும் தன்னைச் சுற்றி நின்றவர்களுக்காகவும் - வாழ்ந்து காட்டினார். மாவீரர்களையும் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூரும் கணங்களில் கவலையோடு கரைந்துபோகும் அவர், ஏனைய நேரங்களில் சிறிய புன்னகையோடு நிறைந்தவராகவே காணப்பட்டார்.
இன்று, இங்கே துயில்கொண்டிருக்கும் தோழி வைதேகி - இராசநாயகம் துஸ்யந்தி தீபவர்ணன் அவர்களின் இழப்பின் துயரில் வாடும் தீபன் அண்ணை, இசைக்கோ மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களின் துயரில் நாமும் எங்கள் கரங்களை பற்றிக்கொள்கின்றோம்.
மண் மீது பற்றுக்கொண்ட எவரும் வரலாற்றில் மறைவதில்லை, அவர்கள் என்றும் வாழ்ந்தவாறும எமக்கு வழிகாட்டியாகவே ஒளிர்வார்கள்.
மேலதிக பகிர்வுகள்


.jpeg)



.jpeg)


No comments:
Post a Comment