உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - கான்பரா - 2026 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 May 2026

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - கான்பரா - 2026

 


கான்பராவில் 18-05-2026 திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுச்சுடரினை திரு. ரவி அவர்களும் ஈகைச்சுடர்களை திரு. விக்கி மற்றும் திரு. செல்வா ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து தமிழர் இனவழிப்பு வரலாற்றை பிரதிபலிக்கும் நினைவுப் பகிர்வுகள், நடன நிகழ்வுகள், மற்றும் அண்மையில் சிட்னியில் திறக்கப்பட்ட தமிழர் நினைவுத்தூபி பற்றிய காணொளி என்பன பகிரப்பட்டன.

சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் கான்பெரா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக திரு. கோகுலரூபன் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும், திருமதி. சுபா செல்வகுமார் மற்றும் திரு. சாம்பமூர்த்தி ஆகியோரும் நினைவு உரைகளை வழங்கினர்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து பல உணர்வுப்பூர்வமான நடனங்கள் அரங்கேறின. திருமதி சுபா செல்வகுமார் தயாரிப்பில் பேனாட் அலைனா, பரிதி செல்வகுமார், அபிசன் கிருஷ்ணகரன், லோயிதன் செல்வகுமார் ஆகியோரின் நடனமும், திருமதி நித்யா தயாரிப்பில் அருணிகா விக்னதாசன், கஸ்மிகா சதீஸ்வரன், மைலாஸ்ரீ முரளி, பதுமிகா கிருபாகரன், ஆரதி விக்னதாசன் ஆகியோரின் நடனமும் இடம்பெற்றன. ஜோசபின் மற்றும் ரொவீனா (Josephine and Rowena) ஆகியோரின் நடனமும் அனைவரையும் நெகிழ வைத்தது.

இறுதிப் போரின்போது எமது தொப்புள்கொடி உறவுகள் மூன்று வேளையும் கஞ்சி குடித்து உயிர் வாழ்ந்த அவல நிலையை நினைவூட்டும் வகையில், எப்படித்தான் மறப்பது என்ற  பாடலூடாக முள்ளிவாக்கால் அவலங்கள் காட்சி படுத்தப்பட்டது. 

முள்ளிவாய்க்கால் ஓலங்களின் நினைவாக  இறுதி நாளில் உயிர் காத்த உணவான கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.

சிட்னியின் பெண்டில் ஹில் (Pendle Hill) பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட 'முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி' ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது என கான்பெரா நினைவேந்தல் மேடையில் சுட்டிக்காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள் ஆஸ்திரேலியத் தமிழ் டயஸ்போராவின் கடந்த காலப் போராட்டங்களை உருக்கமாக நினைவு கூர்ந்தனர். 2009ஆம் ஆண்டு ஈழத்தில் இறுதிப் போர் உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கும் பிரதமரின் இல்லத்திற்கும் நடுவே தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அன்று நமது அவலக் குரல் அரசாங்கத்தின் செவிகளைச் சென்றடையவில்லை என்பது மிகுந்த வேதனையுடன் நினைவுகூரப்பட்டது .

அன்று எமது குரல் கேட்கப்படாமல் போயிருந்தாலும், இன்று சிட்னி மண்ணில் எழுந்துள்ள இந்த நினைவுத்தூபி ஒரு மாபெரும் வரலாற்றுச் சான்றாகும் . அன்று முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரமான சம்பவங்களை நமது வருங்காலச் சந்ததியினர் எக்காலத்திலும் மறந்துவிடாமல், உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்குக் காலக்கண்ணாடியாக இந்த நினைவுத்தூபி அமையும் என்ற பலத்த நம்பிக்கையோடு இச்செய்தி பகிர்ந்து கொள்ளப்பட்டது . திருமதி அபிராமி  அவர்களின்  தலைமையில்  இன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.




















































No comments:

Post a Comment

Post Bottom Ad