கான்பராவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர்நாள் - 2026 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 28 November 2026

கான்பராவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர்நாள் - 2026


கான்பரா நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில், 2026 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கான்பராவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியத் தலைவரின் உரை ஒலிபரப்பப்பட்டது. பின்னர், திருமதி மலர் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.


அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடியை முன்னாள் போராளி திரு. கௌசிக் அவர்கள் ஏற்றினார். அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை கான்பரா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. செந்தில் அவர்கள் ஏற்றினார். அவுஸ்திரேலியப் பழங்குடியின மக்களின் கொடியும் உரிய பிரதிநிதிகளால் ஏற்றப்பட்டது.


தொடர்ந்து, பொதுக் கல்லறைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


ஆரம்ப கலைநிகழ்வாக, ஐந்து இளம்பெண்கள் பங்கேற்ற குழு நடனம் பொதுக் கல்லறைக்கு முன்னால் இடம்பெற்றது. மாவீரர் பாடலுக்கு அமைந்த இந்நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.


நிகழ்ச்சிகளை அபிராமி அவர்கள் தொகுத்து வழங்கினார்.


தொடர்ந்து, கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் “கல்லறை தழுவும் காற்றே” என்ற கவிதையை இளையோர் அபிசன் அவர்கள் உணர்வுபூர்வமாக வாசித்தார்.


அதனைத் தொடர்ந்து, கான்பரா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. செந்தில் அவர்கள் மாவீரர் நாளின் வரலாற்றுப் பின்னணி, அதன் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று நினைவுகளை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.


இளையோர் பிரித்திகன் அவர்கள் தனது கவிதையின் ஊடாக நினைவுகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தினார்.


தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த ஒருவரின் அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில் முகநூலில் பகிரப்பட்டிருந்த “எப்படி இப்படிச் சிரித்தீர்கள்” என்ற தலைப்பிலான கவிதையை இளையோர் ஆதவன் அவர்கள் உணர்வுபூர்வமாக வாசித்தார். அன்றைய காலகட்டத்தில் அச்சிறுவன் எதிர்கொண்ட அனுபவங்களும், அவனது மனதில் பதிந்த நினைவுகளும் இக்கவிதையின் ஊடாகப் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.


மேலும், பதுமினா அவர்கள் கவிதை ஒன்றை வாசித்தார்.


அதனைத் தொடர்ந்து, திருமதி சுபா செல்வா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரை நினைவேந்தலின் முக்கியத்துவத்தையும், வரலாற்று நினைவுகளை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.


நிகழ்வின் மற்றுமொரு கலைநிகழ்ச்சியாக, அருணிகா அவர்கள் “இராச கோபுரம் எங்கள் தலைவர்” என்ற பாடலுக்கு நடனமாடினார்.


இவ்வாறு கவிதைகள், சிறப்புரைகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வின் இறுதியில், ஏற்றப்பட்டிருந்த கொடிகள் மரியாதையுடன் இறக்கப்பட்டு, நிகழ்வு நிறைவுபெற்றது.


இளைய தலைமுறையினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, கடந்தகால வரலாற்றையும் நினைவுகளையும் தலைமுறைகளுக்கிடையே பகிர்ந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.




































No comments:

Post a Comment

Post Bottom Ad