தமிழ்ப் பாடசாலைகளில் விசேட வணக்க நிகழ்வு பற்றிய கோரிக்கை - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 1 May 2022

தமிழ்ப் பாடசாலைகளில் விசேட வணக்க நிகழ்வு பற்றிய கோரிக்கை

 


மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், தமிழ்ப்பாடசாலைகளிலும் விசேட வணக்கநிகழ்வு ஒன்றை பாடசாலை நேரத்தில் ஒழுங்குசெய்யுமாறு கேட்டுக்கொள்ளும் அறிக்கை ஒன்றை, மாநில ரீதியான தேசிய செயற்பாட்டு அமைப்புகள் முன்வைத்துள்ளன.


அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:


அன்பான உறவுகளே,

அமைதிவழிமுறையில் ஈழத்தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட சமஉரிமைக்கான கோரிக்கைகள், வன்முறை வழியில் அடக்கப்பட்டபோது, ஆயுதவழியிலான விடுதலைப்போராட்டம் தோற்றம்பெற்றது. அனைத்து ஈழத்தமிழ்மக்களின் சனநாயக வழியிலான பிரகடனத்தின் வழியில், அன்றைய இளைய தலைமுறை விடுதலைப் போராட்டத்தை வீறுடன் முன்னெடுத்தது. சர்வதேச நாடுகளின் ஆதரவின்றி, சொந்த மக்களின் பலத்தில் தமிழ்த்தேசம் தோற்றம் பெற்றது வரலாறு.


ஆனால் சுடர் விட்டுப் பிரகாசித்த எமது தாய்நிலம், புதிய நூற்றாண்டின் கொடிய இனவழிப்பின் சாட்சியாய் அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்தது. இலங்கைத்தீவில், தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே, காலங்காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் படைகள், முள்ளிவாய்க்காலில் அதன் உச்சக்கட்ட இனவழிப்பை நிகழ்த்தியது. இந்தப்போரில் சிறிலங்கா அரசு தனது சக்திக்கு மீறிய வகையில்  கடன்களை பெற்று, தனது இராணுவ இயந்திரத்தை பலப்படுத்துவதற்கு பல சர்வதேச நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியதை நாம் மறக்கமுடியாது.


விடுதலைக்காய்ப் போராடிய போராளிகளும், தேசத்தின் மக்களாய் எம்மண்ணோடு வாழ்ந்த எமது உறவுகளுமென நிறைந்த எமது தாயகம், இனவாதப் படைகளின் கொடிய போராயுதங்களின் மனிதாபிமானமற்ற போரில் சிதறடிக்கப்பட்டது. இக்கொடிய போரில் இழந்துபோன எம்முறவுகளை நினைவில் ஏந்தி, உலகப்பரப்பெங்கும் தமிழர் வாழும் தேசங்களில் மே மாதம் 18ஆம் நாளை ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்’ என்று ஆண்டுதோறும் நினைவுகூர்ந்துவருகின்றோம்.


இந்த வகையில் அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் 18 - 05 - 2022 புதன்கிழமை நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இதேவேளை, தமிழ்ப்பாடசாலைகளில் (14-05-2022 அல்லது 15-05-2022 அன்று) நினைவேந்தல் நாளை முன்னிட்டு விசேட வணக்கநிகழ்வு ஒன்றை பாடசாலை நேரத்தில் ஒழுங்குசெய்யுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


1. தமிழ்ப்பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களில் பலர், தமது நெருங்கிய உறவுகளை இந்த போரில் இழந்திருக்கின்றார்கள். அவர்களது தாயை, தந்தையை, சகோதரர்களை, நெருங்கிய உறவுகளை, நண்பர்களை என பலரை நேரடியாக இழந்திருக்கின்றார்கள்.

2. தமிழ்ப்பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களில் பலர் போர்ப்பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு ஆற்றுப்படுத்துகை அவசியம். அது பாடசாலை மட்டத்திலும் செய்யப்படவேண்டும்.

3. கனடாவின் ஒன்றாறியோ மாநிலம் "தமிழர் இனவழிப்பு அறிவூட்டல் வாரம்" (Tamil Genocide Education Week) என்பதை பிரகடனப்படுத்தி,  நீதிக்கான கோரிக்கையை வலுப்படுத்துவது மட்டுமன்றி, உளநல ஆற்றுப்படுத்துகைக்கான செயற்றிட்டங்களுக்கும் உதவி வருகின்றது.

4. கனேடிய பிரதமர், பிரித்தானிய பிரதமர் உட்பட பல சர்வதேச தலைவர்கள் வெளிப்படையாக நினைவேந்தல் நாளுக்கான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

5. அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், நினைவேந்தல் நாள் பற்றிய அவசியத்தை வலியுறுத்திவருகின்றார்கள். ஆண்டுதோறும் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இந்நினைவேந்தல் நிகழ்வுகளில் 5000 இற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் பங்குகொண்டுவருகின்றார்கள். 

6. தாயகத்திலும் கட்சி வேறுபாடற்று நினைவேந்தல் நாள் பற்றிய ஒருமுகப்பட்ட கருத்து உண்டு. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்நினைவேந்தல் நாளை உணர்வோடு நினைவு கூர்ந்து வருகின்றார்கள்


எனவே மேற்படி விடயங்களை கருத்திற்கொண்டு, பாடசாலை மட்ட வணக்கநிகழ்வை ஒழுங்குபடுத்துமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம். இந்நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் நடைமுறைச்சிக்கல்கள் இருந்தால், அதுபற்றி மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு உதவியாக உடனடியாக, தெரியப்படுத்தும்படியும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.



இவ்வண்ணம்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - NSW (Jana 0401 842 780)

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - VIC (Vasanthan 0433 002 619)

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - QLD (Akilan 0424 075 175)

தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு - SA (Piratheepan0449 299 924)

தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை - WA (Viththi 0469 823 269)

தமிழ்த் தேசிய நினைவேந்தல் குழு (ACT, TAS, NT)



மேலதிக இணைப்பு:











No comments:

Post a Comment

Post Bottom Ad