சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 18 May 2022

சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - சிட்னி


தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வு சிறப்பான முறையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றுள்ளது. 18-05-2022 புதன்கிழமை மாலை 06.35 மணிக்கு போமன் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


பொதுச்சுடரினை 09-03-1988 அன்று வீரச்சாவடைந்த வீரவேங்கை ரவி என அழைக்கப்படும் கார்மேகம் சண்முகராசா என்ற மாவீரரின் சகோதரியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் பேரவலத்தை கடந்து சிட்னியில் வசிப்பவருமான திருமதி செல்வராசா கமலேஷ்வரி அவர்கள் பொதுச்சுடர் ஏற்றினார். இவரது சகோதரி இன்றும் சிறிலங்கா படையினரால் நேரடியாக கைதுசெய்யப்படு காணாமலாக்கப்பட்ட அவரது மகனையும் மருமகளையும் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து அவுஸ்திரேலிய பழங்குடிமக்களின் கொடியை  மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ஸ்கந்தா  அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை  Straightfield Councilor சாரங்கன் மகேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் மாறன்  அவர்கள் ஏற்றிவைத்தார்.


ஈகைச்சுடரினை, முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது அந்த அவலத்தில் தப்பி இனவழிப்பின் சாட்சியான யேசுராசா பேதுருப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார். சமநேரத்தில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது சிறுகுழந்தைகளாக உயிர்தப்பிய இளையோரும் ஏனைய இளையோரும் இணைந்து நினைவுச்சுடர்களை ஏற்றினார்கள்.


தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள். முள்ளிவாய்க்கால் வலியையும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


முதல் நிகழ்வாக "வைகாசி மாதத்திலே வார்த்தையில்லா ஓலம்..." என்ற பாடலுக்கான நடன நிகழ்வை இளையோர்கள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து மருத்துவ கலாநிதி மனமோகன் அவர்கள் நினைவுரையாற்றினார். அவர் தனதுரையில், தாயக மக்களின் உரிமைக்கான குரலையும் வாழ்வாதாரத்திற்கான தேவைகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களே பொறுப்பெடுத்து செயற்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


அடுத்ததாக, தாயகத்தில் பல்வேறு உதவி திட்டங்களில் பங்குகொள்வதற்காக சென்ற  பேராசிரியர். ஜோன்வைற்கோல் அவர்கள் உரையாற்றினார். இவர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ போராளிகளின் பணியின் தேவையை அறிந்து, அவர்களுக்கான கற்கைநெறியை தானே முன்வந்து செய்த மருத்துவர். அவுஸ்திரேலியாவின் மருத்துவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுவரும்  Medical Journal Of Australia என்ற இணையம் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவபிரிவு தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியவர். 


அவர் தனதுரையில், மருத்துவம் கற்பிக்கும்போது மருத்துவபோராளிகளுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன் தமிழர்களிற்கான நீதி கிடைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.


தொடர்ந்து, நியுசவுத்வேல்ஸ் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் தரப்பின் ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அங்கீகரிக்கும் பிரேரணையை முன்வைத்த மேல்சபை பாராளுமன்ற உறுப்பினர் அந்தனி டிஅடம் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பை, லேபர் கட்சியின் செயற்பாட்டாளரான துர்க்கா ஓவன் வாசித்தார். இத் தீர்மானத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நியூ சவுத்  வேல்ஸ் மேல் சபை பாராளுமன்றம் கருத்தில் கொண்டு, மே-18 நினைவேந்தல் நாளை தமிழர் அமைப்புகள் இணைந்து செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபை  ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மே 18 தொடர்பான  தீர்மானத்துக்கு அனைத்து பாராளுமன்ற கட்சிகளினதும் ஆதரவு அளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் மண்ணில் தங்கள் பெற்றோர்கள் வாழ்ந்த அவல வாழ்வை எண்ணி - அதற்கான நீதியை கோரி - அவர்களின் பிள்ளைகளின் நீதிக்கான தேடலாக செல்வன் நிலுக்சன் மற்றும் செல்வி நிதுர்சி ஆகியோர் தமது உரையை சிறப்பாக வழங்கினர்.


அதனைத் தொடர்ந்து, தாய்மண்ணின் தாகம் என்ற குறியீட்டு நடனத்தை இளையோரும் பெரியோரும் இணைந்து வழங்கினர். தாய்மண்ணின் சிறப்பையும் அதன் அவலத்தையும் நீதிக்கான தேடலையும் கொண்டதாக அந்நடனம் அமைந்திருந்தது.


முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த பாடலை ஜெய்கரன் அவர்கள் பாடினார். அவரது வரிகளில் அவரது இசையில் உருவான பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டு மண்டபத்தில் ஒலிக்கிவிடப்பட்டது.


இறுதி நிகழ்வாக, கவியரங்க நிகழ்வு ஒன்றும் சிறப்பான முறையில் நடைபெற்று, தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு இரவு 8.45 இற்கு நிறைவடைந்தது.























































No comments:

Post a Comment

Post Bottom Ad