மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழா - 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 9 January 2023

மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழா - 2023


வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் நினைவாக ஆண்டுதோறும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா கோவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் மீண்டும் இவ்வாண்டு மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றுள்ளது.


08 - 01 - 2023 ஞாயிற்றுக்கிழமையன்று East Burwood மைதானத்தில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில்   ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டும் விளையாட்டுக்களில் பங்கெடுத்தும் தமிழர் விளையாட்டு விழாவை சிறப்பித்திருந்தனர்.


காலை 9.00 மணியளவில் அவுஸ்திரேலியா மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றல்களுடன் விளையாட்டு விழா ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை செயற்பாட்டாளர் திருமதி. தட்சினி இராமலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை மாமனிதர் குணாளன் அவர்களின் மகனும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளருமான திரு. ஹரிதாஸ் ஞானகுணாளன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. ரமேஸ் பாலகிருஷ்ணன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார். அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து  விளையாட்டுப்போட்டிகளின் விதிமுறைகள் தொடர்பாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு. டொமினிக் சந்தியாபிள்ளை அவர்கள் சிறுவிளக்கவுரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மைதானத்தில்  விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.


சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அத்துடன் கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம்  முதலான இன்னும் பல விளையாட்டுக்களும் இடம்பெற்றன. சிறுவர்களுக்கான சங்கீதக் கதிரை போட்டிகளும்  இடம்பெற்றதுவும் குறிப்பிடத்தக்கது.


வழமைபோன்று தாயகத்து உணவு வகைகளான தோசை, வடை, ஒடியற்கூழ், கொத்துரொட்டி உட்பட பல உணவுவகைகளும் பலூடா, மோர் முதலான குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் தமிழ்த்தாய் நாட்காட்டி உள்ளிட்ட தாயகம் சார்ந்த வெளியீடுகளும் விற்பனை செய்யப்பட்டன. 


போட்டிகளில் பங்குகொண்டு   வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு விளையாட்டுக்களில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய சிறுவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


கரப்பந்தாட்டப் போட்டியில் இறுதியாட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட NTSC  அணிக்கும் Denish 1 அணிக்குமிடையிலான போட்டியில் NTSC அணி வெற்றியீட்டியது.


துடுப்பெடுத்தாட்டப்போட்டியில் இறுதியாட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட Melbourne Eelam Boys அணிக்கும் Sivas Reegal அணிக்குமிடையிலான போட்டியில் Melbourne Eelam Boys அணி வெற்றியீட்டியது.


கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கும் இரண்டாவது இடத்தைப்பெற்ற அணிகளுக்கும்  வெற்றிக்கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு போட்டிகளில் பங்கெடுத்து விளையாடிய விளையாட்டு வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கிகெளரவிக்கப்பட்டனர்.


இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 9.00 மணியளவில் தமிழர் விளையாட்டுவிழா இனிதே நிறைவுற்றது.

































































































No comments:

Post a Comment

Post Bottom Ad