உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - மெல்பேர்ண் - 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 19 May 2023

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - மெல்பேர்ண் - 2023

சிங்கள பேரினவாத அரசுகளால் காலத்திற்குக் காலம் ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளின்போது உயிர்நீத்த பொதுமக்களையும் 2009ம் ஆண்டு இறுதி யுத்த நாட்களில் முள்ளிவாய்க்கால் மண்ணில்  சிங்கள அரசபடைகளால் இனவழிப்பு செய்யப்பட்ட தமிழ்மக்களின் 14வது ஆண்டு நினைவுகளையும் சுமந்த தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு 18 - 05 - 2023 வியாழக்கிழமையன்று  அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


இந்நிகழ்வு Hungarian Community Centre மண்டபத்தில் மாலை 7.00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கொற்றவன் தலைமையில் ஆரம்பமாகியது.


முதலில் காலத்திற்குக்காலம் சிங்களப் பேரினவாத அரசுகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலங்கள் அனைத்தையும் அனுபவித்து கடந்துவந்த திருமதி. உமா றமேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.


அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மூத்த செயற்பாட்டாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. சஜிந்தன் குணராசா அவர்கள் ஏற்றிவைத்தார். 


அடுத்து முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரின்போது, அரசபடைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுப்பீடத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவுப் பீடத்திற்கான ஈகைச்சுடரினை, அன்றைய நாட்களில் ஒரு சிறுமியாக முள்ளிவாய்க்கால்ப் பேரவலங்கள் அனைத்தையும் கடந்து வந்த செல்வி. ஜானுஷா செல்வக்குமார் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் வரிசையாக வந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பீடத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள். 


அடுத்து, இதுவரை காலமும் தாயக விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும் இலங்கை இந்தியப்படைகளாலும் இரண்டகக் குழுக்களாலும் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களையும் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நெஞ்சங்களில் நினைந்துருகி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து வணக்கநடனம் இடம்பெற்றது. "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் ......" என்ற பாடலுக்கு நடன ஆசிரியை திருமதி. மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் மெல்பேர்ண் நடனாலயாப் பள்ளி மாணவிகள் வணக்க நடனத்தை வழங்கினார்கள்.


அடுத்து, முள்ளிவாய்க்கால் வலிகளைச்சுமந்த கவிதை இடம்பெற்றது. இதனை ஆரம்பப்பள்ளி மாணவியான செல்வி. றியா புஸ்ப்பராசா அவர்கள் நிகழ்த்தினார். 


அடுத்து சிறப்புரையை திருமதி. கீதா இராமச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரின்போது மக்கள் அனுபவித்த துன்பங்களையும் பொதுமக்கள் தமது பாதுகாப்பிற்காக அமைத்திருந்த காப்பகழிகளுக்குள்ளேயே எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் காப்பகழிகளுக்குள்ளேயே பல பொதுமக்கள் பலியாகிய சம்பவங்களையும் பதிவுசெய்து தற்பொழுது தாயகத்தில் இடம்பெற்றுவரும் ஆக்கிரமிப்புக்களையும்  குறிப்பிட்டு தனது சிறப்புரையை நிகழ்த்தியிருந்தார்.


அதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் சாட்சியப்பதிவை ஒளிப்பதிவாக கான்பராவில் வசிக்கும் திருமதி. சுபா செல்வா அவர்கள் வழங்கியிருந்தார். அவரது சாட்சிய காணொளிப்பதிவு அகலத்திரையில் திரையிடப்பட்டது. அவர் தனது சாட்சியப் பதிவில், முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலங்களை மிகவும் தத்துரூபமாக  எடுத்துவிளக்கியதோடு, அன்று பொதுமக்களின் பசிபோக்கிய முள்ளிவாய்க்கால்க் கஞ்சியின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தவேண்டும் என்று வலியுறுத்தியதோடு, முள்ளிவாய்க்காலிலிருந்து மீண்டு வந்தபின்னரும்  சிங்களப் பேரினவாத அரசின் சிறைச்சாலையில் தான் அனுபவித்த துன்பங்களையும் கண்ணீருடன்  பதிவு செய்திருந்தார்.   


இறுதியாக, சமூக அறிவித்தல்களுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 8.15 மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2023 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.


இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின்போது பொதுமக்களுக்கு பசிபோக்க பெரிதும் உதவிய, முள்ளிவாய்க்கால்க் கஞ்சியை நினைவூட்டும் முள்ளிவாய்க்கால்க் கஞ்சி வழமைபோல இவ்வாண்டும் நிகழ்வின் நிறைவில் அனைவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad