தமிழீழத் தேசிய மாவீரர் நாள் - பேர்த் - 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 28 November 2023

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் - பேர்த் - 2023

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு இருந்த தமிழினத்தின் விடிவெள்ளிகளாக, தமிழின விடுதலைக்காகவும் தன்னாட்சி சுதந்திரத்திற்காகவும் தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை, இனத்தின் ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிய என திடசங்கற்பம் பூண்ட தமிழின சிற்பிகளை சிரம் தாழ்த்தி வணங்கும் தமிழீழத்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு திங்கட்கிழமை 27.11.2023 அன்று மாலை மணி 6.05க்கு பேர்த்தில் ஆரம்பமாகியது.


நிகழ்வுகளில் முதலாவதாக தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை திரு. உமாகாந்தன் செல்வநாயகம் அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை  திரு. நிமலகரன் சின்னக்கிளி அவர்கள் ஏற்றிவைத்தார்.  தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை கேணல் சால்ஸ் அவர்களின் துணைவியார் திருமதி. ராஜி சாள்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 2008ஆம் ஆண்டு ஆற்றிய மாவீரர்நாள் உரை ஒலிபரப்பப்பட்டதை தொடர்ந்து நினைவொலி எழுப்பப்பட்டது. நினைவொலியை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் அதன்பால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.


தொடர்ந்து, முதன்மைச் ஈகைச்சுடரினை லெப்டினன்ற் நேயமலையவன் அவர்களின் சகோதரி திருமதி. மெனிஷ்ரெலா விமலாதித்தன் அவர்கள் ஏற்றிவைக்க, தாயக விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியாகிய லெப். சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கும், முதற் பெண்மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களது  திருவுருவப்படத்திற்கும் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய மாதிரி வடிவக் கல்லறைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உரித்துடையோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றிவைக்க  துயிலுமில்ல பாடல் ஒலிக்கப்பட்டது. சுடர்களின் நடுவே மாவீரர்செல்வங்களின் உருவை அவர்களின் உணர்வை, இலட்சியத்தை தரிசித்துருகும் அற்புத நிகழ்வில் அனைவரும் ஒன்றியிருந்தனர்.


தொடர்ந்து மலர்வணக்க பாடல் ஒலிக்க மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்துநின்று அனைவரும் மலர்வணக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.


ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களுக்கான வணக்க நடனம் இடப்பெற்றது. நடனத்தை செல்வி. தனஞ்ஜெயனி ஜெயகஜன் மற்றும் செல்வி. யதுசிகா ரகுநாதன் வழங்கினர். அடுத்து “மாவீரர் கனவுகளை மனதினிலே ஏற்றிடுவோம் என்று மாவீரர்நாள் கவி வழங்கினார் செல்வி. மேகன் தயான் அவர்கள். அதனைத் தொடர்ந்து இளைய தலைமுறை சார்பாக செல்வன். சஜித் விமலாதித்தன் மாவீரர் நாள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.


அடுத்து கார்த்திகையில் தீபங்கள் எரியும் எனும் கவிதையை செல்வன் ஜஸ்வின் ஜெயகஜன் அவர்கள் வழங்கினார். மாவீரச்செல்வங்களுக்கான குழுப்பாடலினை செல்விகளான அப்சரா உமாகாந்தன், வரோனிகா குகராஜா, லக்சகி விமலாதித்தன், அக்சனா குலசேகரம் மற்றும் டன்சிகா மன்மதராசா ஆகியோர் வழங்கிச்சென்றனர். அதனைத் தொடர்ந்து செல்வி அனன்யா சுபதீபன் அவர்கள் மாவீரர்களுக்கான கவிதையை வழங்கியதை தொடர்ந்து மாவீரர்நாள் சிறப்புரையினை திரு. வாசன் முருகசோதி அவர்கள் வழங்கினார்.


நிறைவாக தேசியக் கொடிகள் இறக்கப்பட்டன்.  இவ்வாண்டு மாவீரர்நாள் சிறப்புற அமைய தங்களாலான நிதி, உணவுப்பொருட்களை அன்பளிப்பு செய்தோர் மற்றும் ஒழுங்கமைப்பு வேலைகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்ததுடன் தமிழீழ தேசிய செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன.


இந் நிகழ்வை திருமதி. ரூபனா யோகேஸ்வரன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார்.




























































No comments:

Post a Comment

Post Bottom Ad