தியாகதீபம் திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 26-09-2024 வியாழக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. வென்ற்வேத்வில் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 07.30 மணிக்கு ஆரம்பமானது.
பிறைக்குமரன் பேரின்பராசா மற்றும் கவிவேந்தன் பாலகுமார் ஆகியோர் நிகழ்வினை தொகுத்து வழங்க, நிகழ்வினை ஆரம்பித்துவைக்கும் முகமாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை கப்டன் சந்தியா அவர்களின் அக்காவின் மகளான தமிழினி ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் றேமருதா கருணைவேந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் கஜந்தன் தனபாலசிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, 26-09-1987 அன்று ஈகைச்சாவெய்திய லெப் கேணல் திலீபன், 26-09-2001 அன்றில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் (முகிலன்) மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயு (குயிலன்) ஆகியோர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட பீடத்தில், தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் றாகுல் விஸ்வறூபன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழீழ தாயக விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், உயிர்நீத்த தமிழக உறவுகளையும், போராட்டத்தின்பால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் உறவுகளையும் நினைவில் சுமந்து, மெழுகுதிரி எரிவதைப்போல, சிறுக சிறுக தன்னை எரித்து, மக்களின் விடிவிற்காக ஒளியை பிரகாசித்தவாறு தியாகி திலீபன் அவர்களின் உன்னத தியாகத்தை மனதில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் வரிசையாக சென்று திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து, இளையோர்களுக்கான நிகழ்வை திரு. யாழவன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
முதல் நிகழ்வாக "பாடும் பறவைகள் வாருங்கள் ..." என்ற தியாகதீபம் திலீபன் நினைவுப் பாடலை சிருஸ்திகா செல்வம் அவர்கள் உணர்வுபூர்வமாக பாடினார்.
அதனைத் தொடர்ந்து, இளையோர்கள் இணைந்து "நான் திலீபன் பேசுகின்றேன்..." என்ற உரையை இளையோர்களான:
சனோசன் செல்வகுமார்
பார்த்தீபன் செல்வகணேசன்
அகர்வின் திருச்செல்வம்
கவின் கீதன்
தரணி பாலகுமார்
தஸ்வின் சிவராசா
தொடர்ந்து, தியாகதீபம் திலீபன் அவர்களின் தியாகம் பற்றிய உரையை இளையோர்களான:
மோகிதா செல்வராசா
தமிழ்நிலா சிவராம்
தமிழ்திவ்யா சிவராம்
காவியா சேரன்
ஓவியா சேரன்
லக்சரா செல்வகுமார்
றேசின் ஜனார்த்தனன்
திவாசினி சிவராசா
ஆகியோர் தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, "பாடும் பறவைகள் வாருங்கள் ..." என்ற தியாகதீபம் திலீபன் நினைவுப் பாடலை பவித்திரா மகேந்திரன் அவர்கள் உணர்வுபூர்வமாக பாடினார்.
நிறைவாக, "பேசுவோம் போரிடுவோம்" என்ற புத்தக அறிமுக நிகழ்வை, மூத்த செயற்பாட்டாளர் குலசேகரன் சஞ்சயன் அவர்கள் நெறிப்படுத்தினார்.
இறுதியில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரையோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
வேலை நாளாக இருந்தபோதும், பெருமளவில் மக்கள் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனுக்கு தமது உணர்வுபூர்வமான அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் இளையோர் பட்டறை நிகழ்வு காலை பத்து மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை நடைபெற்றிருந்தது. அதன்போது, அவர்களுக்கான வகுப்புகள், கலந்துரையாடல்கள், வாசிப்புகள், எழுத்துக்கள் என பல அறிவூட்டல் செயற்பாடுகள் நடைபெற்றிருந்தன. அத்தோடு, அவர்களுக்கு இடையே சதுரங்க போட்டியும் நடைபெற்றிருந்தன.
No comments:
Post a Comment