தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை, தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி எழுச்சிகரமாக நினைவுகூர்ந்து வருகின்றோம். தமிழீழத் தாயகத்தில் பல்வேறு இராணுவ அடக்குமுறைக்கு மத்தியிலும், உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து நூறு என்ற நிலை மாறி, ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில், அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக்கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த மாவீரர் லெப்ரினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.
அன்றிலிருந்து நவம்பர் 27 ஆம் நாளை தமிழீழ மாவீரர் நாளாக அனைவரும் உணர்வார்ந்த ரீதியில் கடைப்பிடித்துவருகின்றார்கள். 1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும், 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள், 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தன.
பெரும் போரழிற்விற்கு பின்னர், 2009 ஆம் ஆண்டிலிருந்து மீளவும் நவம்பர் 21 - 27 வரையான காலப்பகுதியை சிறப்பாக நினைவுகூரலுக்கான வாரமாக கருதி "மாவீரர் வாரம்" என அனைத்து தமிழ் மக்களும் நினைவுகூர்ந்து வருகின்றார்கள். அதனைப் போல, மே 12 - மே 18 வரையான காலப்பகுதியை "தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் வாரம்" என நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.
எனவே, இந்தக் காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக ஒன்றித்து தமிழீழ மாவீரர்களையும் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்ந்து வருகின்றார்கள் என்பதைக் கருத்திற் கொண்டு, எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்நாட்களில் களியாட்ட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மெல்பேர்ணில் பிரபல பாடகர் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசைநிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதை அறிந்து மிகவும் கவலை அடைகின்றோம்.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை வேறு பொருத்தமான நாட்களில் நடத்துமாறு ஏற்பாட்டாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
No comments:
Post a Comment