பாரததேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் நீர்கூட அருந்தாது சாகும்வரை உண்ணாநோன்பிருந்து 26 - 09 - 1987 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்களின் 37வது ஆண்டு நினைவு நிகழ்வும் தியாகதீபம் கலைமாலை நிகழ்வும் கடந்த 22 - 09 - 2024 ஞாயிற்றுக்கிழமையன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
கிறிஸ்தோபர் தேவாலய கேட்போர் கூடண்டபத்தில் (5 Doon Avenue, Glen Waverley, Victoria 3150) மாலை 6.00 மணியளவில் இளைய செயற்பாட்டாளர் செல்வன். பவித்திரன் சிவநாதன் அவர்களது தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை இளைய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. நிரோஜன் நாகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. மகிந்தன் பூரணகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ் ஏதிலிகள் கழகத்தின் செயற்பாட்டாளர் திரு. தனுஜெயன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு மறைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் சிங்கராஜா அவர்களது துணைவியார் திருமதி. உதயா சிங்கராஜா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
சிறிலங்கா அரசபடைகளின் ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த்தாக்குதலில் 26 - 09 - 2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர்களான வீரவேங்கை நேரு மற்றும் லெப் கேணல் வேங்கைத்தமிழன் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரன் திரு சாம்பமூர்த்தி சாந்தகுமார் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
சுகயீனம்காரணமாக 25 - 08 - 2002 அன்று சாவடைந்த கேணல் ராயு அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் மகிழன் அவர்களது புதல்வி செல்வி தரணிகா கேதீஸ்வரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் தியாகதீபம் லெப் கேணல் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்
மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து வணக்க நடனம் இடம்பெற்றது. "விழிகளில் பொழுது அருவிகளா வீர.. திலீபன் நினைவுகளா..." என்ற பாடலுக்கு மெல்பேர்ண் நடனாலயாப் பள்ளி மாணவிகளான செல்வி. சஹானா பாலசூரிய மற்றும் செல்வி பிரியங்கா நெடுமாறன் ஆகியோர்கள் வணக்க நடனத்தை வழங்கினார்கள்.
அடுத்து தியாகதீபம் நினைவுகளைச் சுமந்த நினைவுக் கவிதை இடம்பெற்றது. இவ்நினைவுக் கவிதையை செல்வி. றெஷா சின்னத்தம்பி அவர்கள் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை திரு. நந்தன் நடேசு அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது போராட்டகாலச் செயற்பாடுகளையும் அதற்கூடாக ஏற்படுத்தப்பட்ட மக்கள் எழுச்சியையும் விபரித்ததோடு கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோர்களது களச்செயற்பாடுகளையும் தொட்டுக்காட்டியிருந்தார்.
அடுத்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது பதிவுகளை உள்ளடக்கிய குறுங்காணொளித்தொகுப்பு அகலத்திரையில் திரையிடப்பட்டது.
அடுத்து விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அவர்கள் 2009_ம் ஆண்டிற்கு முன்னர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அண்மையில் அனைத்துலகச் செயலகத்தினரால் வெளியிடப்பட்ட புத்தகம் தொடர்பான ஒரு அறிமுக உரை இடம்பெற்றது. இவ் அறிமுக உரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைமைச் செயற்பாட்டாளர் திரு. வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வான தாயகப் பாடல்களை உள்ளடக்கிய கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது. மெல்பேர்ண் இசைக்கலைஞர்களின் பின்னணி இசையில் திரு. சஜிந்தன், திரு சுரேஸ் மற்றும் செல்வி றியா ஆகியோர்கள் தாயகப் பாடல்களை உணர்வுபூர்வமாகப் பாடினார்கள்.
இறுதியாக சமூக அறிவித்தல்கள் வாசிக்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 8.00 மணியளவில் தியாகதீபம் கலைமாலை 2024 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment