அன்பான உறவுகளே,
தேசியத்தலைவரை வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரெழுச்சியாக ஒன்றுபடுகின்ற காலங்களில்,
தமிழ் மக்களின் நீதிக்கான குரல்கள் வலுப்பெறும் காலங்களில், அவற்றைக் குழப்பும் விதமாக
அவ்வப்போது குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக சில செயற்பாடுகள் நடைபெற்றுவருவதை நீங்கள்
அறிவீர்கள்.
அந்த வகையில் தான், தேசியத்தலைவரது
விடயத்தை மட்டும் மையப்படுத்தி, ஒரு புதிய அமைப்பின் பெயரில் ஒரு அறிவித்தலை விடுப்பதும்,
அதன் ஊடாக சுவிஸ்லாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்
ஊடாக, தேசியத்தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு என்ற பெயரில், நிகழ்வு ஒன்றை செய்வதற்கு
முயல்கின்ற செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
எமது தேசிய நிகழ்வுகள், தேசியச் செயற்பாடுகள்
என அனைத்திலும் அடிநாதமாக தேசியத்தலைவரே இருக்கின்றார். அத்தோடு, வரலாற்றில் உலகத்தலைவர்கள்
அனைவருமே அவர்களது பிறந்த நாளில் நினைவு கூரப்படுவது போல, எமது தேசியத்தலைவரின் பிறந்த
நாளிலும் அவர் சிறப்பாக போற்றப்பட்டு வருகின்றார். வீரவணக்க நிகழ்வு மூலமும் அதனைச்
செய்யவேண்டும் என சிலர் விரும்புகின்றார்கள். ஆனால், தேசியத்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற
முடிந்தளவு ஓரணியில் நின்று தாயக மக்களுக்கான தேசியப் பணியில் செயலாற்றுவதே அவருக்கான
மேன்மையான மதிப்பளிப்பை வழங்கும்.
தேசியத்தலைவரின் வழிநடந்தவர்கள் தேசியத்தலைவரின்
அடிப்படையான விருப்பங்களை எனினும் பூர்த்தி செய்தே அவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வினை
செய்யவேண்டும். மாவீரர் மற்றும் அங்கவீனமடைந்த போராளிகள் குடும்ப பராமரிப்பு, மாவீரர்களின்
பெற்றோர்களின் நலன்பேணல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, இறுதிப் போரில் வீரச்சாவடைந்த
மாவீரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்கான தொடர் செயற்பாடு, தாயகத்திலும் புலத்திலும் பலமான
தேசியக் கட்டமைப்புகள் ஊடாக தாயக மக்களுக்கான நீதி போன்ற அடிப்படைகளை நிறைவேற்றுவதற்காக
அனைவரும் முதலில் ஒருமித்து செயற்படவேண்டும்.
மேலும், தமிழர்களின் நீதிக்கான மையப்புள்ளியாக
இருக்கின்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாளான மே 18 என்பது சர்வதேச கவனத்தை பெற்று வருகின்ற
நிலையில், அதனை திசை திருப்பி, மக்களை குழப்பி, குறிப்பாக தாயக மக்களை நெருக்கடிக்குள்
தள்ளி, மக்களை ஓரணியில் ஒன்றுபடாமல் இருப்பதற்கான முயற்சியாகவே இவ்விடயம் கையாளப்பட்டு
வருகின்றது.
இதன் ஏற்பாட்டாளர்களால் ஊடகங்களுக்கு
தெரிவித்துவரும் பல கருத்துக்கள் தேசியத்தலைவர் பற்றியும், தமிழீழ விடுதலைப் போராட்டம்
பற்றியும் பல தவறான கருத்துருவாக்கங்களை உருவாக்கும் நோக்கில் அமைந்திருப்பதும் அதிர்ச்சியைத்
தருகின்றது.
எனவே, மக்களை பிரிக்கின்ற, குழப்பங்களை
ஏற்படுத்துகின்ற, தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்துகின்ற விடயங்களுக்கு துணைபோகவேண்டாம்
என கேட்டுக்கொள்கின்றோம்.
மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று தமிழீழத்
தேசியக்கடமைகளில் இணைந்து நிற்பது போல தேசியத்தலைவர் விடயத்திலும் அனைவரும் ஓரணியில்
உறுதியோடு பயணிக்கவேண்டும். அதுவே அவருக்கான உண்மையான மதிப்பளிப்பாக இருக்கும். அதற்கான
பணிகளில் அனைவரும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
தேசியத்தலைவருக்கு மதிப்பளிக்கும் நோக்கோடு
குழப்பங்களை தவிர்க்கும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி அன்று வீரவணக்க நிகழ்வு
என்ற பெயரில் ஒழுங்குசெய்துள்ள நிகழ்வை நிறுத்துமாறு அதன் ஏற்பாட்டாளர்களை மீளவும்
கேட்டுக்கொள்கின்றோம்.
தேசியத்தலைவருக்கான வீரவணக்கமும் தேசியத்தலைவரின்
வருகையும் என்ற இருமுனை மூலோபாய நகர்வுகள் எதிரிகளின் நோக்கத்தை நிறைவேற்றுதற்கான சூழலையே
ஏற்படுத்துவதால், இதனைத் தெளிவாக மக்கள் புரிந்துகொண்டு, வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத்
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையே, எமது விடுதலை வழிகாட்டி என்பதை உளமார ஏற்று, எமக்காகத்
தம்முயிரை ஈந்த மாவீரர்களின் ஈகங்களின் வழிநின்று, எத்தடைவரினும் அத்தடை உடைத்து, தமிழீழத்
தேசியத்தலைவரின் சிந்தனை வழியே தொடர்ந்தும் போராடுவோம் என மீளவும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
மேலதிக தொடர்பு: 0401 842 780, 0433 002 619, 0405 864 864, 0405 453 596, 0470
274 539
மின்னஞ்சல்: tccaumedia@gmail.com
Arikkai-July-2025 - TCC Australia





No comments:
Post a Comment