சிட்னி - பெண்டில்கில் சமூக வளாகத்தில் 2026 மே 16 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர் நினைவுத்தூபி திறப்பு விழாவில், பெருமளவு தமிழ்மக்கள் கலந்துகொண்டனர். இது அவுஸ்திரேலியாவில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நினைவு, சிந்தனை மற்றும் கூட்டு ஆற்றுப்படுத்தலின் முக்கிய தருணமாக அமைந்தது.
கம்பர்லாந்து நகர சபையின் ஆதரவுடனும் பங்களிப்புடனும் நிறுவப்பட்ட இந்த நினைவுச் சின்னம், அவுஸ்திரேலியாவின் நகர சபை ஆதரவு பெற்ற முதலாவது தமிழர் சமூக நினைவிடமாகும். இது நினைவுகூரல், மலரஞ்சலி, சிந்தனை மற்றும் சமூக ஆறுதலுக்கான நிரந்தர இடமாக அமைகின்றது.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் சாட்சிகளாக வாழ்ந்துவரும் செல்வன். இசைக்கோ தீபவர்ணன் மற்றும் செல்வி. அருளினி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வை தொகுத்து வழங்கினர். கம்பர்லாந்து நகர சபை முதல்வர் ஓலா ஹாமெட் நினைவுச் சின்னத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். திறப்பு நிகழ்வின் போது இளம் தமிழ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நினைவுச் சின்னத்தின் அருகில் நின்று தலைமுறைகளைத் தாண்டிய நினைவுகூரலை பிரதிபலித்தனர்.
செல்வி. கதிரினி இரட்ணகுமார் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி நினைவுத்தூபிக்கு மலர் வணக்கம் செலுத்திய பின்னர், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, செல்வி. கிசோமி சிவநேசன் அவர்களால் "ஓலம் கேட்டதோ...." என்ற முள்ளிவாய்க்கால் நினைவு பாடல் உணர்ச்சிபூர்வமாகப் பாடப்பட்டது.
தொடர்ந்து வரவேற்புரையை சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. ஜனா சிவராமலிங்கம் அவர்கள் வழங்கினார்.
தமிழர் இனவழிப்பின் சாட்சிகளாக பல்வேறு காலப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட திருமதி. நளாயினி சண்முகராஜா, செல்வன். பிறைக்குமரன் பேரின்பராசா மற்றும் செல்வி. துளசி செல்வராசா ஆகியோர் தங்களின் வாழ்வனுபவங்கள், இழப்புகள், உயிர்வாழ்வு மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக கூட்டு நினைவுகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பகிர்ந்துகொண்டமை நிகழ்வின் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான தருணங்களாக அமைந்தன.
தொடர்ந்து, நினைவிட ஏற்பாட்டுக்குழுவின் சார்பில், திருமதி. துர்க்கா ஓவன் அவர்கள் தனதுரையில், தமிழர் நினைவுத் தூபி அமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கிய கம்பலர்லாந்து நகர சபை முதல்வருக்கும் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து, நகர சபை முதல்வருக்கு தமிழ்ச்சமூகத்தின் சார்பில் மதிப்பளிப்பு விருதை வழங்கினார்.
கம்பர்லாந்து நகர சபை முதல்வர் ஓலா ஹாமெட் தனது உரையில், இந்த நினைவிடம் தமிழர் சமூகத்திற்கு நினைவு, சிந்தனை மற்றும் ஆற்றுகைப்படுத்தலுக்கான முக்கிய இடமாக இருப்பதை வலியுறுத்தினார். மேலும் இனப்படுகொலை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனுபவித்த துயரம், இழப்பு மற்றும் நீடித்த மனவேதனையையும் அவர் ஏற்றுக்கொண்டார். எதிர்கால தலைமுறைகள் இந்த வரலாற்றை மறக்காமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட அவர், தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர இந்த நிரந்தர நினைவிடத்தை உருவாக்க நகர சபை வழங்கிய ஆதரவைப் பாராட்டினார்.
புறஸ்பக்ற் தொகுதி மாநில அவை உறுப்பினர் ஹ்யூ மெக்டெர்மட் எம்.பி அவர்கள் தனதுரையில், இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் தமிழர்கள் அனுபவித்த துயரங்களுக்கு நீதி, நினைவுகூரல் மற்றும் அங்கீகாரம் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் அவர் சமீபத்தில் நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை குறித்து உரையாற்றியபோது, இந்த நினைவிடத்தை “தமிழர் இனப்படுகொலை நினைவிடம்” என குறிப்பிட்டதும் நிகழ்வில் நினைவுகூரப்பட்டது.
மாநில மேலவை உறுப்பினர் அந்தனி டிஅடம் அவர்கள் தனதுரையில், தமிழ் இனப்படுகொலையின் பாதிக்கப்பட்டோருடன் தன்னுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன், உண்மை, நீதி, நினைவுகூரல் மற்றும் அங்கீகாரம் தேடும் சமூகங்களுடன் தொடர்ந்து நிற்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். முன்னாள் செனட்டர் லீ ரியானனும் தமிழர் சமூகத்திற்கான தனது நீண்டகால ஆதரவை வெளிப்படுத்தி, மனித உரிமைகள் மற்றும் வரலாற்று அங்கீகாரத்திற்கான போராட்டம் தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நினைவுச் சின்னத்தை உருவாக்கவும் திட்டத்தை முன்னெடுக்கவும் பங்களித்த குளோப் மெமோரியல் நிறுவனத்தின் திரு. கிளென் டாரொச் மற்றும் திருமதி. அமாண்டா டாரொச் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
நினைவிட ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் நன்றியுரை வழங்கிய திரு. ரஜீவன் அவர்கள், கம்பர்லாந்து நகர சபை, முதல்வர், உள்ளாட்சி உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள், கலைநிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மற்றும் இந்த நினைவிடத்தையும் திறப்பு விழாவையும் சாத்தியமாக்கிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, வருகை தந்த பொதுமக்கள் அனைவரும், நினைவிடத்தின் முன் மலர்களை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினர். இது நினைவு, சிந்தனை, அமைதி மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான நம்பிக்கையின் நிலையான இடமாக இந்த நினைவிடம் திகழ்வதை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்நினைவிடத்தின் உருவாக்கத்தின்போது, பிரத்தியேகமாக முள்ளிவாய்க்காலில் இருந்து தருவிக்கப்பட்ட மண்ணும் இடப்பட்டு நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்விற்கு வருகை தந்தவர்கள் ஆர்வத்துடன் நினைவக குறிப்பேட்டிலும் தமது உணர்வுகளை பதிவு செய்தஇருந்தனர்.























































No comments:
Post a Comment