உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - மெல்பேர்ண் - 2026 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 19 May 2026

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - மெல்பேர்ண் - 2026


சிங்களப்பேரினவாத அரசுகளினால் காலத்திற்குக்காலம் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின்போது பலியாகிய தமிழ்மக்களையும் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அரசபடைகள் மேற்கொண்ட இனவழிப்புப்போரின்போது  இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 



இந்நிகழ்வு முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் படுகொலைசெய்யப்பட்ட  தமிழ்மக்களின் 17வது ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


மெல்பேர்ண் நகர மத்தியில் அமைந்துள்ள ஹங்கேரியன் சமூக மைய மண்டபத்தில்  18.05.2026 திங்கட்கிழமையன்று மாலை 6.30 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கொற்றவன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 


முதல்நிகழ்வாக பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பொதுச்சுடரினை முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் தனது தாயார், உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் மற்றும் மைத்துனி என குடும்பத்தில் நால்வரை இழந்ததோடு தானும் விழுப்புண்ணடைந்து   முள்ளிவாய்க்கால் பேரவலம் அனைத்தையும் கடந்துவந்த திரு. சசிராஜ் சண்முகம் அவர்கள் ஏற்றிவைத்தார்.


அதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை சமூகச்செயற்பாட்டாளர் திரு. முகுந்தாஸ் அழகேஸ்வரன்  அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் திரு. வெற்றிக்குமரன் கணநாதன்  அவர்கள் ஏற்றிவைத்தார்.


அடுத்து முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் காவுகொள்ளப்பட்ட தமிழ்மக்களின் நினைவாக நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பீடத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. இவ் ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்கால் பேரவலங்கள் அனைத்தையும் கடந்து வந்த திருமதி. றீற்ரா அருள்ரூபன்   அவர்கள் ஏற்றிவைத்தார்.


தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பீடத்திற்கான மலர்வணக்கம் இடம்பெற்றது.  நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் வரிசையாகவந்து நினைவுப்பீடத்திற்கு உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.


அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. தாயக விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்கள், இலங்கை இந்தியப்படைகளாலும் இரண்டகக்குழுக்களாலும்  படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும்  நாட்டுப்பற்றாளர்கள்,  மாமனிதர்கள் ஆகியோர்களை நெஞ்சில்நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


அடுத்து வணக்கநடனம் இடம்பெற்றது. நடன ஆசிரியை திருமதி மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி மாணவிகளின் வணக்க நடனம் இடம்பெற்றது. வணக்க நடனமாக "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்......." என்ற பாடலுக்கு மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி மாணவிகள்  வணக்க நடனத்தை  வழங்கினார்கள்.


அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலிகளையும் அன்றையநாட்களின் அரசபடைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களின் கொடூரத்தையும் விளக்கியதான நினைவுரையை திரு .கிருசாந்த் இரத்தினம் அவர்கள் நிகழ்த்தினார்.


அடுத்து ஆங்கிலமொழியிலான  உரையினை செல்வி பா. லொலிற்றா அவர்கள் நிகழ்த்தினார். 


அடுத்ததாக "முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையும் மெளனம்காத்த சர்வதேசமும்" என்ற தலைப்பில் செல்வி அபிதாரணி சந்திரன் தலைமையிலான கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் செல்வி. சகிர்த்தனா சிவநாதன் மற்றும் துவாரகன் சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 


இறுதியாக சமூக அறிவித்தல்களுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 8.00 மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2026 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.


வழமைபோல,  முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் ஒரு அடையாளமாக வழங்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால்க்கஞ்சி இம்முறையும் நிகழ்வு நிறைவுற்றபின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




































































































































No comments:

Post a Comment

Post Bottom Ad