தமிழீழ மக்களின் ஆணையேற்று, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தினை முன்னெடுத்து, தமிழர் இறைமை மீட்டு நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டமைக்கப்பட்டதன் 50வது அகவை நாளினை ஒட்டி 05.05.2026 செவ்வாய்கிழமை அன்று எழுகைப் பெருநிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது.
லெப்ரினன்ற் கேணல் அக்பர் அவர்களின் புதல்வன் பிறைக்குமரன் மற்றும் லெப்ரினன்ற் கேணல் எழிற்கண்ணன் அவர்களின் புதல்வி கதிரினி ஆகியோர் நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், தேசியசெயற்பாட்டாளர்கள் மற்றும் இளைய செயற்பாட்டாளர்கள் என இணைந்து ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து, அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. முரளி கணேசன் அவர்கள் ஏற்றி வைக்க, அடுத்து அவுஸ்திரேலிய தேசியக் கொடியினை
தொழிலாளர் கட்சியின் பிரதிநிதி, தமிழ்ச் செயற்பாட்டாளர் திருமதி. துர்க்கா ஓவன் அவர்கள் ஏற்றி வைக்க, அதனை அடுத்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு.சதீஸ்கரன் தியாகராசா அவர்கள் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை லெப்ரினன்ற் கேணல் ஞானசுதன் அவர்களின் பேர்த்தி லவனிகா குவேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, தமிழீழத் தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் போராட்டத்தின் பால் உயிரிழந்த அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
வரவேற்புரையை கான்பரா தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திருமதி. சுபா செல்வம் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து, மாவீரர்கள் நினைவான "வெண்ணிலவே வா... பூந்தென்றல் வா....." என்ற பாடலை பாடகர் திரு. சிவகாந் சிவப்பிரகாசம் அவர்கள் பாடினார்.
எழுகை நிகழ்வு பற்றிய உரையை மெல்பேர்ண் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. வசந்தன் ஆனந்தராஜா அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, "நிலமிழந்துபோனால் நாம் பலமிழந்து போவோம்" என்ற தொனிப்பொருளில் அமைந்த எழுச்சி நடனத்தை இளையோர்கள் சிறப்பாக வழங்கினர்.
சிறப்பு நிகழ்வாக, பத்மசிறி திரு. வேலு ஆசான் அவர்கள் தலைமையில் தமிழர் பாரம்பரிய பறை இசையை உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கினர். இந்திய அரசின் உயர் விருதான பத்மசிறி விருதை கடந்த ஆண்டு பெற்ற திரு. வேலு ஆசான் அவர்களுடன், கலைமாமணி திரு. மதுரை கோவிந்தராஜ், (கொக்கலிக்கட்டை, மரக்கால் ஆட்டக் கலைஞர்) அவர்களும் தோழமை உணர்வோடு - தமது பயண நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, "கடலலையே கொஞ்சம் நில்லு" என்ற பாடலை செல்வி. கிசோமி சிவநேசன் அவர்களும், "அன்னைத் தமிழீழ மண்ணே" என்ற பாடலை திரு. கமலநாதன் ஐயா அவர்களும் பாடினர்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் - இதே நாளில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கட்டமைக்கப்பட்ட தேசக் கட்டுமானங்கள் பற்றி ஆங்கிலத்தில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஜனனி ஜெகன்மோகன் அவர்கள் உரையாற்றினார்.
நிறைவாக, நன்றியுரையை சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் ஜனா சிவராமலிங்கம் வழங்கினார்.
தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிஉரையோடு எழுகைப் பெருநிகழ்வு நிறைவடைந்தது.











































































No comments:
Post a Comment