
பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கப்பிள்ளையார் ஆலயமுன்றலில் 19 - 03 - 1988 முதல் 19 - 04 - 1988 வரையான முப்பதுநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 37வது ஆண்டு நினைவுநாளும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் நினைவுநாளும் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 27/04/2025 அன்று நடைபெற்றது.
தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கிய நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை திரு. செந்தில்நாதன் அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியை திரு. சஜிந்தன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
அதைத் தொடந்து, அன்னை பூபதி உட்பட மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்களின் திருவுருவப் படங்களுக்கு அவர்களின் குடும்பத்தவர்களும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களும் ஈகைச் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
பின்னர், பொதுமக்களின் மலர்வணக்கமும் அகவணக்கமும் இடம்பெற்றது. தலைமையுரையை திரு. வசந்தன் நிகழ்த்தினார்.
"தாம் சார்ந்த மக்களின் விடியலுக்காக பொதுமக்களாக இருந்து எத்தகைய பணிகளை ஆற்றலாமென்பதற்கு எமது மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் உதாரணமாக விளங்குகிறார்கள். மெல்பேர்ண் நகரிலேயே எம்மோடு வாழ்ந்து எங்களோடு பணியாற்றிய மறைந்த மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் பலர் எமக்கு முன்னால் எடுத்துக்காட்டாக வாழ்ந்து இருக்கிறார்கள். எத்தகைய இன்னல்களுக்குள் அவர்கள் தேசப்பணியாற்றினார்கள் என்ற வரலாற்றை நேரடியாகப் பார்த்தவர்கள் நாம். எனவே அவர்களின் வாழ்வை வழிகாட்டியாக வரித்து நாமும் எமக்குரிய பணியைச் செவ்வனே செய்ய வேண்டும், எமது தேச விடுதலைக்கு எம்மால் முடிந்தவரை உழைக்க வேண்டும்" என்று தனது தலைமையுரையை வழங்கினார்.
தொடர்ந்து அன்னை பூபதி அவர்கள் பற்றிய நினைவுக் காணொலி திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு பல்லாண்டுகளாக உற்ற தோழனாக இருந்து உழைத்து அண்மையில் மறைந்த வணக்கத்துக்குரிய Richard WOOTTON அவர்கள் பற்றிய நினைவுரையை திரு. திலகராஜன் அவர்கள் நிகழ்த்தினார். "பல தேசிய இன விடுதலைப் போராட்டங்களோடு தன்னை ஐக்கியப்படுத்தி இனவிடுதலைக்காக உழைத்த ரிச்சரட் அடிகளார், தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தோடும் பல்லாண்டுகள் இணைந்து பணியாற்றியவர். பல்வேறு உலகத்தலைவர்கள் மட்டங்களில் எமது விடுதலைப் போராட்டம் பற்றிய பரப்புரையை மேற்கொண்டவர். குறிப்பாக, தமிழ்மக்களின் தலைமை விடுதலைப் புலிகளே என்பதை எவ்வித தளம்பலுமின்றி உரத்துச் சொல்லி, எமக்கான அரசியற் பணிகளை மேற்கொண்டவர். கிழக்குத் தீமோர் விடுதலையடைந்த நேரத்தில் அந்நாட்டு அரசியல் உயர் மட்டங்களோடு தமிழர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தி, சர்வதேச மட்டத்தில் எமக்காக பணியாற்றியவர். தமிழ்மக்களுக்காக அவராற்றிய பங்களிப்பு என்றென்றும் எம்மால் நினைவுகூரப்பட வேண்டியவை" என அவர் தனது நினைவுரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் நினைவாக இசைப்பிரியன் இசையமைத்துப் பாடிய ”விடுதலைக்கு ஏங்கி வலிகளை தாங்கி” என்ற பாடலை திரு. டொமினிக் அவர்கள் பாடியபின்னர் சமூக அறிவித்தல்கள் பகிரப்பட்டு, கொடியிறக்கலோடு நிகழ்வு நிறைவுற்றது.

No comments:
Post a Comment