பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் நீர்கூட அருந்தாது சாகும்வரை உண்ணாநோன்பிருந்து 26 - 09 - 1987 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்களின் 38 வது ஆண்டு நினைவு நிகழ்வும் தியாகதீபம் கலைமாலை நிகழ்வும் கடந்த 26 - 09 - 2025 வெள்ளிக்கிழமையன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
கிறிஸ்தோபர் தேவாலய கேட்போர்கூடண்டபத்தில் (5 Doon Avenue, Glen Waverley, Victoria 3150) மாலை 6.00 மணியளவில் விக்ரோறியாமாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் கொற்றவன் அவர்களது தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை நீண்டகாலச்செயற்பாட்டாளர் திருமதி இராணி கிறிஸ்ரி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை திரு. கிருஷ்ணமூர்த்தி முனுசாமி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை இளைய செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்வன் துவாரகன் சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழ் ஏதிலிகள் கழகத்தின் முதன்மைச்செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி ரதி பாத்லட் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
26 - 09 - 2001 அன்று சிறிலங்கா அரச படைகளின் ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட கேணல் சங்கர் (முகிலன்) அவர்களது திருவுருவப்படத்திற்கு திருமதி. தேவறூபி சுதாகரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
25 - 08 - 2002 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த கேணல் ராயு (குயிலன்) அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் செங்கொடி அவர்களது சகோதரி திருமதி மேரி சாரதா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்
மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் திலீபன் நினைவாக வணக்க நடனம் இடம்பெற்றது. "உயிராலே திலீபன் படைத்த தியாகம் வாழுதே..." என்ற பாடலுக்கு மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி ஆசிரியை திருமதி மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் நடனாலயாப்பள்ளி மாணவி செல்வி அஞ்சலி நெடுமாறன் அவர்கள் வணக்க நடனத்தை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து "திலீபன் மாமாவின் ஆளுமையின் பக்கங்கள்" என்ற தலைப்பில் கருத்தியல் அரங்கம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இன்றைய தலைமுறையினராகிய செல்விகளான அபிதாரணி சந்திரன், லக்சிகா கண்ணன் மற்றும் சகிர்த்தனா சிவநாதன் ஆகியோர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கி நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.
அடுத்து தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் திலீபன் அவர்களது தியாகத்தின் பதிவுகளை உள்ளடக்கிய குறுங்காணொளித்தொகுப்பு அகலத் திரையில் திரையிடப்பட்டது.
இறுதியாக சமூக அறிவித்தல்கள் வாசிக்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 7.20 மணியளவில் தியாகதீபம் கலைமாலை 2025 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment