தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு சிறப்பான முறையில் சிட்னியில் 12-10-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. தமிழீழத் தாயக விடுதலைப் போரில் முதல் பெண் மாவீரராக வீரச்சாவடைந்த 2ம் மாலதி அவர்களின் நினைவு நாளில் ஆண்டுதோறும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இவ்வாண்டு தமிழ்த்தேசியம் சார் புத்தகங்களை அறிமுகப்படுத்துகின்ற சிறப்பு நிகழ்வையும் உள்ளடக்கியதாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை நிதர்சினி செல்வகுமார் மற்றும் துஷ்யந்தினி சதீஸ்வரன் ஆகியோர் தொகுத்துவழங்க நடைபெற்ற எழுச்சி நாளினை சிறப்பாகத் தொடங்கிவைக்கும் முகமாக எமது மூத்தவர்களாக வழிகாட்டிகளாக செயற்படுகின்றவர்கள் ஐந்து பேர் இணைந்து நின்று பொதுச்சுடர்களை ஏற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து இளையோர் சார்பில் றேமா கருணைவேந்தன் அவர்கள் 2ம் லெப்ரினன்ற் மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை சர்மிளா கீதன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து ஜெரி அவர்கள் பெண் - ஒரு காவியம் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வழங்கினார்.
இளையோர் கலைநிகழ்வாக முதலாவது நிகழ்வாக, சின்னவர்களாய் தாமிருந்து பெரியவர்களாகும்போது என்னவாக வருவோம் என்ற கருப்பொருளில் நடனத்தை வழங்கினர். இரண்டாவது கலைநிகழ்வாக இவ்வாண்டு வெளியிடப்பட்ட சூரியப்புதல்விகள் என்ற இறுவட்டில் இருந்து "எங்களுக்கென்றொரு நாடு இருந்ததே..." என்ற பாடலுக்கு நடனம் நடைபெற்றது. இப்பாடலுக்கான பாடல் வரிகளை சிட்னிப் பாடல் ஆசிரியர் குவேந்திரன் அவர்கள் எழுதியிருந்தார்.
விசேட நிகழ்வாக, சிட்னியில் நீண்டகாலமாக தமிழ்ச் சமூகத்திற்கான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த எழுவர் சமூகசேவைக்கான விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் பொன்வண்டுகள் சிறுகதைகள் தொகுப்பின் அறிமுக உரையை சோனா பிறின்ஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
செம்மணி கவிதைகள் நூலின் அறிமுக உரையை சுவர்ணலதா செந்தில்குமார் அவர்கள் நிகழ்த்தினார்.
வெற்றிச்செல்வி அவர்களின் போராளியின் காதலி நாவலின் அறிமுக உரையை சுபா செல்வம் அவர்கள் நிகழ்த்தினார்.
அதன் பின்னர், மூன்று நூல்களும் சுதந்திரப் பறவைகள் பாடல் இறுவட்டும் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இன்னொரு கவிதையை லவனிகா குவேந்திரன் அவர்களும் நன்றியுரையை கலா யோகன் அவர்களும் நிகழ்த்தினர்.
சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டு, நிறைவாக உறுதியுரையுடன் எழுச்சிநாள் நிகழ்வு நிறைவடைந்தது.


No comments:
Post a Comment